;
Athirady Tamil News

பெண்கள் விடுதியில் ரகசிய கேமரா, வெளிநாட்டு இன்ப சுற்றுலா… டெல்லி சாமியாரின் லீலைகள்

0

டெல்லி வசந்த் கஞ்ச் பகுதியில் ஸ்ரீ சாரதா இந்திய மேலாண் மையம் என்ற பெயரில் செயல்பட்டு வரும் கல்வி நிறுவனத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவிகள் ஸ்காலர்ஷிப் பெற்று படித்து வருகின்றனர். சுவாமி சைதன்யானந்த சரஸ்வதி என்ற பார்த்தசாரதி என்பவர் இதன் இயக்குநராக உள்ளார்.

இந்நிலையில், முதுநிலை நிர்வாகத்திற்கான டிப்ளமோ படித்து வரும் 15-க்கும் மேற்பட்ட மாணவிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளனர். இதன்படி, சாமியார் பார்த்தசாரதிக்கு எதிராக ஆபாச பேச்சுகள், ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்புதல் மற்றும் உடல்ரீதியாக கட்டாயப்படுத்தி தொடர்பு கொள்ளுதல் போன்றவற்றில் ஈடுபட்டார் என அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளனர்.

ஆசிரம வார்டன்கள் சிலர், மாணவிகளை சாமியாரிடம் அறிமுகப்படுத்தி வைத்தனர். அந்த சாமியாரின் வற்புறுத்தலுக்கு ஏற்ப நடந்து கொள்ளும்படி பெண் பணியாளர்கள் மற்றும் நிர்வாகத்தினரும் கூட மாணவிகளுக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர். அவர்களின் ஏழ்மையை பயன்படுத்தி பாலியல் துன்புறுத்தல் நடந்துள்ளது என கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட மாணவிகள் அளித்த வாக்குமூலம் அடிப்படையில், சாமியாருக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் உள்பட பிற வழக்குகளை போலீசார் பதிவு செய்தனர். இதனை டெல்லி தென்மேற்கு மாவட்ட காவல் துணை ஆணையாளர் அமித் கோயல் கூறியுள்ளார்.

இந்நிலையில் சாமியார், பெண்கள் விடுதியில் ரகசிய கேமராக்களை வைத்து மாணவிகளின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்துள்ளார். இரவில் அவருடைய அறைக்கு வரும்படி மாணவிகளை அவர் வற்புறுத்துவார். வெளிநாட்டு பயணத்தின்போது அவருடன் வரும்படியும் வலியுறுத்துவார் என அதுபற்றிய எப்.ஐ.ஆர். தெரிவிக்கின்றது. மாணவிகளில் ஒருவருடைய பெயரை அவருடைய விருப்பத்திற்கு எதிராக மாற்றியுள்ளார் என்றும் எப்.ஐ.ஆர். தெரிவிக்கின்றது.

இந்த மையம், கர்நாடகாவின் சிருங்கேரியில் உள்ள ஸ்ரீ ஸ்ரீ ஜெகத்குரு சங்கராச்சார்யா மகாசமஸ்தானம் தட்சிணம்நயா ஸ்ரீ சாரதா பீடம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. எனினும், இந்த சம்பவத்திற்கு பின்னர் சாமியாருடனான தொடர்பை சாரதா பீடம் துண்டித்துள்ளது.

முன்னாள் மாணவி ஒருவர் இந்த மையத்தின் நிர்வாகத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், சாமியார், அந்த மையத்தில் பாலியல் ரீதியாக மாணவிகளை துன்புறுத்தி வருகிறார் என குற்றச்சாட்டாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. கடந்த ஜூலை 31-ந்தேதி இந்த கடிதம் மையத்திடம் கிடைத்துள்ளது.

அதற்கு அடுத்த நாள் விமான படையின் கல்வி இயக்குநரகத்தில் இருந்து, குரூப் கேப்டன் அந்தஸ்திலான அதிகாரி ஒருவரிடம் இருந்து அந்த மையத்திற்கு இ-மெயில் ஒன்று சென்றுள்ளது. அதில், பல்வேறு மாணவிகளும் புகார் அளித்துள்ளனர்.

விமான படை அதிகாரிகளுடைய குடும்பத்திலுள்ள பலர் இந்த மையத்தின் மாணவிகளாக இருந்துள்ளனர். இதனால், இந்த விவகாரத்தில் தலையிட்டு உள்ளது. இதனை தொடர்ந்தே போலீசை தொடர்பு கொண்டு, சாமியாருக்கு எதிராக கல்வி மையம் சார்பில் புகாரளிக்கப்பட்டு உள்ளது. அவருக்கு எதிராக 300 பக்கங்கள் கொண்ட சான்றுகளையும் மையம் அனுப்பி உள்ளது.

இதற்கு முன்பும், மோசடி, நம்பிக்கைக்கு எதிராக நடந்து கொள்ளுதல் உள்பட பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டார் என அந்த கல்வி மையம் சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. தப்பியோடிய அவரை தேடி வருகிறோம் என போலீசார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.