கரூரில் விஜய் கூட்ட நெரிசலில் சிக்கி ஏராளமானோர் பலி
கரூர் விஜய் கூட்டத்தில் பங்கேற்ற 13 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மேலும் சிலர் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டத்தில் மயக்கமடைந்த 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து அரசு மருத்துவமனைக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் விரைந்தனர்.
இதனால் மருத்துவமனையில் பரபரப்பு நிலவுகிறது. இதனிடையே கரூர் மாவட்ட ஆட்சியரிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின் நிலவரம் குறித்து கேட்டறிந்தார். கரூருக்கு அமைச்சர்கள், காவல் உயர் அதிகாரிகள் உடனடியாக செல்ல முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
2026 சட்டப்பேரவை தோ்தலையொட்டி, விஜய் கடந்த 13-ஆம் தேதி முதல் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மக்களை சந்தித்து பிரசாரம் செய்து வருகிறாா். அதன்படி செப்.13-இல் திருச்சி, அரியலூா், செப்.20-இல் நாகை, திருவாரூா் ஆகிய மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டாா்.
தொடா்ந்து, இன்று நாமக்கல்லிலும் கரூரிலும் அவர் பிரசாரம் மேற்கொண்டார். இந்த நிலையில் விஜய்யின் கரூர் பிரசாரத்தின்போது கூட்டநெரிசல் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.