;
Athirady Tamil News

கொலம்பியா அதிபரின் விசாவை ரத்து செய்யும் அமெரிக்கா! ஏன்?

0

அமெரிக்காவில் வன்முறையைத் தூண்டியதற்காக, கொலம்பியா அதிபர் குஸ்தாவோ பெட்ரோவின் விசாவை ரத்து செய்யப்போவதாக, அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது.

பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் வன்முறைகளைத் தொடர்ந்து எதிர்த்து வரும் கொலம்பியா அரசு, கடந்த 2024 ஆம் ஆண்டு இஸ்ரேலுடன் தனது உறவுகளை முறித்துக்கொண்டது. மேலும், இஸ்ரேல் பாலஸ்தீனர்களுக்கு எதிராக இனப்படுகொலை செய்து வருவதாக கொலம்பிய அதிபர் குஸ்தாவோ பெட்ரோவும் குற்றம்சாட்டி வருகிறார்.

இந்த நிலையில், அமெரிக்காவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொது அவைக் கூட்டத்தில் பங்கேற்க அதிபர் குஸ்தாவோ நியூயார்க் சென்றுள்ளார்.

ஐ.நா. அவையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வருகையின்போது, நியூயார்க்கில் அவருக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் அதிபர் குஸ்தாவோ பெட்ரோவும் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய, அதிபர் குஸ்தாவோ, காஸாவில் நடைபெறுவது இனப்படுகொலை எனவும், அமெரிக்க ராணுவ வீரர்கள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் உத்தரவுகளுக்கு ஒத்துழைக்கக் கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, நியூயார்க் தெருவில் நின்று கொண்டு அமெரிக்க வீரர்கள் கட்டளைகளுக்கு ஒத்துழைக்கக் கூடாது எனக் கூறி கொலம்பியா அதிபர் வன்முறையைத் தூண்டியதாகவும், அதனால், அவரது விசாவை ரத்து செய்யப்போவதாகவும் அமெரிக்க வெளியுறவுத் துறையின் எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி, கொலம்பியா உள் துறை அமைச்சகம் கூறியதாவது:

“பாலஸ்தீனுக்கு எதிராக நடைபெறும் இனப்படுகொலையைக் குறித்து ஐ.நா. அவையில் தைரியமாகப் பேசிய சில அதிபர்களில் குஸ்தாவோவும் ஒருவர். அதனால், அவரது விசாவை ரத்து செய்கின்றனர்” எனக் கூறியுள்ளது.

ஆனால், அதிபர் குஸ்தாவோ நேற்று (செப். 27) இரவே நியூயார்க்கில் இருந்து கொலம்பியா தலைநகர் பொகோட்டாவுக்கு திரும்பிவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. பொது அவைக் கூட்டத்தில் பங்கேற்க பாலஸ்தீன அதிபர் மஹ்முத் அப்பாஸ் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அமெரிக்கா விசா வழங்க மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.