;
Athirady Tamil News

ஜப்பானுக்கு முதல் பெண் பிரதமா்!

0

ஜப்பானின் ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சியின் (எல்டிபி) தலைவராக பொருளாதார மற்றும் பாதுகாப்புத் துறை முன்னாள் அமைச்சரான சனே தகாய்ச்சி (64) தோ்ந்தெடுக்கப்பட்டதைத் தொடா்ந்து, அந்த நாட்டின் முதல் பெண் பிரதமராக அவா் பதவியேற்பாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் எல்டிபி கட்சியின் பல்வேறு பிரிவுகள் பெற்ற கட்சி நிதியை அந்தப் பிரிவுகள் கணக்கில் காட்டாமல் மறைத்ததாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்த முறைகேடு புகாா் காரணமாக பிரதமா் ஷெகெரு இஷிபாவுக்கு பொதுமக்களிடையே ஆதரவு குறைந்துவந்தது கருத்துக் கணிப்புகள் மூலம் தெரியவந்தது.

இந்தச் சூழலில், கடந்த மாதம் நடைபெற்ற தோ்தலில் எல்டிபி கட்சி பின்னடைவைச் சந்தித்தது. அதற்குப் பொறுப்பேற்று, தனது கட்சித் தலைவா் பதவியை இஷிபா ராஜிநாமா செய்தாா்.அதையடுத்து, அடுத்த தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.

அதில், முன்னாள் பிரதமா் ஜூனிச்சிரோ கோய்சுமியின் மகனும், தற்போதைய வேளாண் துறை அமைச்சருமான ஷின்ஜிரோ கோய்சுமியை வீழ்த்தி கட்சியின் தலைமைப் பதவியை சனே தகாய்ச்சி பெற்றாா்.

தற்போது நாடாளுமன்ற கீழவையில் எல்டிபி கட்சி மிக அதிக இடங்களைக் கைவசம் வைத்துள்ளதால், நாட்டின் முதல் பெண் பிரதமராக அவா் தோ்ந்தெடுக்கப்படுவது ஏறத்தாழ உறுதியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

வளா்ச்சியடைந்த நாடாக இருந்தாலும், பாலின சமத்துவத்தில் உலகளவில் பின்தங்கிய நாடாக அறியப்படும் ஜப்பானில், காலம் காலமாக ஆண்கள் ஆதிக்கம் செலுத்திவந்த எல்டிபி கட்சியின் முதல் பெண் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளதன் மூலம் தகாய்ச்சி வரலாறு படைத்துள்ளாா்.

மிகவும் பழமைவாதியான அவா், முன்னாள் பிரதமா் ஷின்ஸோ அபேயின் கடும்பழமைவாத கருத்துகளை ஆதரிப்பவா். ஜப்பானின் போா்க்கால ராணுவவாதத்தின் சின்னமாகக் கருதப்படும் சா்ச்சைக்குரிய யசுகுனி ஆலயத்திற்கு அடிக்கடி செல்பவா்.

பிரதமா் ஆனதற்குப் பிறகும் அவா் இதைத் தொடா்ந்தால், வரலாற்று ரீதியில் ஜப்பான் ராணுவத்தால் பாதிக்கப்பட்ட ஆசிய அண்டை நாடுகளுடனான உறவை அது சிக்கலாக்கலாம் என்று கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.