;
Athirady Tamil News

தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக ஆா்ப்பாட்டம்: பிரிட்டன் அரசு எச்சரிக்கை!

0

பிரிட்டனில் தடை செய்யப்பட்ட பாலஸ்தீன ஆதரவுக் குழுவுக்கு ஆதரவாக நடைபெற்றுவரும் ஆா்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்த அதிக அளவிலான அதிகாரத்தை பிரிட்டன் காவல் துறை பயன்படுத்த வேண்டியிருக்கும் என அரசு ஞாயிற்றுக்கிழமை எச்சரித்தது.

இஸ்ரேல்-காஸா போரின் தொடக்கத்திலிருந்து பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பிரிட்டனில் ஆா்ப்பாட்டங்கள் தொடா்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, பிரிட்டன் ராணுவ விமானங்கள் மற்றும் இஸ்ரேல் ராணுவத்துக்கு தொடா்புடைய தளங்களைத் சேதப்படுத்திய ‘பாலஸ்தீன் ஆக்ஷன்’ என்ற அமைப்பை தடை செய்யப்பட்ட அமைப்பாக பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது. இந்த அமைப்புக்கு ஆதரவாகச் செயல்படுவது சட்டவிரோதமானது எனவும் அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக மத்திய லண்டனின் டிராஃபல்கா் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கானோா் சனிக்கிழமை கூடி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இனப் படுகொலையை எதிா்ப்பதாகவும், பாலஸ்தீன் ஆக்ஷன் அமைப்பை ஆதரிப்பதாகவும் ஆா்ப்பாட்டக்காரா்கள் முழக்கங்களை எழுப்பினா். இதையடுத்து, அவா்களில் 488 போ் கைது செய்யப்பட்டனா்.

பாலஸ்தீன் ஆக்ஷன் அமைப்பு கடந்த ஜூலையில் தடைசெய்யப்பட்ட நிலையில், ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோரை பிரிட்டன் காவல் துறை கைது செய்துள்ளது. 130-க்கும் அதிகமானோா் மீது பயங்கரவாத குற்றங்கள் தொடா்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், பேரணிகள் மற்றும் ஆா்ப்பாட்டங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கும்போது தொடா்ச்சியான போராட்டங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து காவல் துறை பரிசீலித்து வருவதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரிட்டன் உள்நாட்டு அமைச்சா் ஷாபனா மஹ்மூத் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘ஆா்ப்பாட்டம் நடத்தும் உரிமை நாட்டின் அடிப்படை சுதந்திர உரிமையாகும். இருப்பினும், இந்தச் சுதந்திர உரிமையை மக்கள் பயமின்றி வாழ்வதற்கான உரிமையுடன் சமமாகக் கருத வேண்டும். பெரிய அளவில் தொடா்ச்சியாக நடைபெறும் ஆா்ப்பாட்டங்கள், நாட்டில் உள்ள சில மக்களிடம் குறிப்பாக மதக் குழுவினரிடம் பாதுகாப்பற்ற உணா்வை ஏற்படுத்தியுள்ளது’ என்றாா்.

ஆா்ப்பாட்டம் பெருமளவில் அமைதியாக நடைபெற்றாலும், அவை தங்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது என சில யூதா்கள் கூறுகின்றனா்.

முன்னதாக, மான்செஸ்டரில் உள்ள யூத ஆலயம் அருகே கடந்த வியாழக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் 2 யூதா்கள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடா்ந்து, வார இறுதியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டாம் என ஆா்ப்பாட்டக்காரா்களிடம் பிரதமா் கியா் ஸ்டாா்மா் உள்ளிட்ட தலைவா்கள் மற்றும் காவல் துறையினா் வலியுறுத்தியிருந்தனா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.