;
Athirady Tamil News

எவரெஸ்டில் பனிப்புயல்: 1000க்கும் மேற்பட்டோர் சிக்கித் தவிப்பு!

0

எவரெஸ்டின் கிழக்கு மலைப்பகுதியில் ஏற்பட்ட பனிப்புயல் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்குச் சிக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலகின் மிகவும் உயரமான மலைப்பகுதி எவரெஸ்ட். இது நேபாளம், சீனா எல்லையில் இந்த சிகரம் அமைந்துள்ளது. இரு நாடுகளிலிருந்தும் இந்த மலைச்சிகரத்துக்கு வீரர்கள் மலையேறுவது வழக்கம். அதன்படி, சீனாவில் தற்போது எட்டு நாள் தேசிய தின விடுமுறையையொட்டி, ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மலையேறி அங்கு முகாமிட்டுத் தங்கியுள்ளனர்.

இந்த நிலையில் , எவரெஸ்ட் சிகரத்தின் கிழக்கே அமைந்துள்ள சீனாவின் திபெத் பிராந்தியத்தில் கடும் பனிப்புயல் ஏற்பட்டுள்ளது. இங்கு முகாமிட்டுத் தங்கியிருந்த 1000-க்கும் மேற்பட்ட வீரர்கள் சிக்கியுள்ளனர். அவர்களில் முதற்கட்டமாக 300-க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

உள்ளூர் மக்கள் மற்றும் மீட்புக் குழு உறுப்பினர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 4,900 மீட்டர் உயரத்தில் படர்ந்துள்ள பனியை அகற்றி பாதைகளைச் சரிசெய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அறிக்கை தெரிவிக்கின்றது.

வெள்ளிக்கிழமை மாலை தொடங்கிய கடும் பனிப்பொழிவானது சனிக்கிழமை வரை தொடர்ந்தது. இதைத் தொடர்ந்து, திபெத்தில் உள்ள டிங்ரி சுற்றுலா குழு எவரெஸ்ட் சிகரத்தைப் பார்வையிடுவதற்கான டிக்கெட் விற்பனையை நிறுத்தியுள்ளது.

எவரெஸ்டின் நேபாளப் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவால் மலையேற்றப் பாதைகள் தடைப்பட்டுள்ளது. நாம்சே மற்றும் ஜோர்சல்லே இடையேயான முக்கிய மலையேற்றப் பாதை நிலச்சரிவால் சேதமடைந்ததாக நேபாள மலையேற்ற முகமைகள் தெரிவித்துள்ளது. மலையேற்றப் பயணிகள் எச்சரிக்கையாக இருக்கவும், பிரதான பாதையிலிருந்து 200-300 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மாற்று பாதையைப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளது.

நேபாளத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 51 பேர் உயிரிழந்துள்ளனர். நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக எவரெஸ்ட் பகுதியில் வழக்கத்திற்கு மாறாகக் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகின்றது. இது மலையேற்றத்தில் ஈடுபட்ட சுற்றுலாப் பயணிகளுக்கு மிகுந்த சிரமங்களை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.