;
Athirady Tamil News

“13-ஆம் திருத்தத்தைப் பற்றிப் பேசுவது தமிழர்களைத் திசைதிருப்பி ஏக்கியராஜ்யத்தை நிறைவேற்றத் துணைபோகும் செயல்” – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

0

13-ஆம் திருத்தத்தைப் பற்றி தொடர்ந்தும் கதைத்துக் கொண்டிருப்பது என்பது அந்த ஏக்கியராஜ்ய அரசியலமைப்பை எதிர்க்க வேண்டிய பொதுமக்களை செயற்படுத்தாமல் திசை திருப்பி ஏக்யராஜ்ய அரசியலமைப்பை தமிழ் மக்களுடைய அனுமதியுடன் ஆதரவோடு நிறைவேற்றுவதற்கு துணை போகின்ற செயலாகவே பார்க்கின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

யாழில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பங்காளிகள் மாகாண சபை தேர்தலை நடைமுறைப்படுத்த வேண்டும் என கதைத்து கொண்டு இருக்கிறார்கள்.

ஒற்றையாட்சி அமைப்புக்குள்ளே தமிழ் அரசியலை நகர்த்த முடியாது என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினருடனான எமது எழுத்து மூலமான ஒப்பந்தத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம்.

13ம் திருத்தம் இறுதி தீர்வல்ல.
ஏக்ய ராஜ்ய யோசனை ஒரு தீர்வல்ல. இரண்டும் நிராகரிக்கப்பட வேண்டும் என்ற விடயத்தை எழுத்து மூலமாக பதிவு செய்திருந்தோம்.

அதற்கு பிறகு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பங்காளி கட்சிகள் அனைவரும் உள்ளூராட்சி சபைகளில் இணைந்து விட்டுக்கொடுப்புகளை செய்து பதவிகளை சபைகளை கொடுத்த பிறகு 13ம் திருத்தம் தொடர்பிலும் மாகாண சபை தொடர்பிலும் பேசுகின்றனர்.

அரசாங்கம் புதிய அரசியலமைப்பை எல்லாம் கொண்டு வரப் போவது கிடையாது. இருக்கிற அதிகாரங்களை பயன்படுத்தி எங்களுடைய செயற்பாடுகளை நாம் தான் முன்னெடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அதையும் இல்லாது செய்யும் அரசாங்கமாகவே இது இருக்கிறது. ஆகவே அந்த ஒப்பந்தத்தை மீறுகின்ற நோக்கத்தோடு இதனை செய்யவில்லை என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினர் எமக்கு தெரிவித்தனர்.

அப்போது நான் சொன்னேன். அரசாங்கம் தெளிவாக பிரதமர், ஜனாதிபதி,வெளிவிவகார அமைச்சர் என முக்கியமான தரப்புகள் உத்தியோகபூர்வ வாக்குறுதிகளை வழங்கி இருக்கிற இடத்ததில் நாங்கள் இவ்வாறு செயற்பட முடியாது என்றேன்.

இந்த 13 தொடர்பான கூட்டங்களை நடத்துவதன் சூத்திரதாரி சுரேஷ் பிரேமச்சந்திரனே. சுவிர்ஸ்லாந்தில் நடந்த சந்திப்பில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் பிரதிநிதியாக சுரேஷ் பிரேமச்சந்திரன் கலந்து கொண்ட வேளையில், புதிய அரசியலமைப்பை கொண்டு வரப்போவதாக அப்போது தெளிவாக வாக்குறுதி கொடுக்கப்பட்டது.

அரசாங்கத்திடம் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மேலதிகமாக இருக்கும் போது ஒருதலைப் பட்சமாக எல்லாவற்றையும் நடைமுறைப்படுத்தக் கூடிய சூழலில் அரசாங்கம் இவ்வாறான பதிலை சொல்லி இருப்பதன் பின்ணணியில்,

13-ஆம் திருத்தத்தைப் பற்றி தொடர்ந்தும் கதைத்துக் கொண்டிருப்பது என்பது அந்த ஏக்கியராஜ்ய அரசியலமைப்பை எதிர்க்க வேண்டிய பொதுமக்களை செயற்படுத்தாமல் திசை திருப்பி ஏக்யராஜ்ய அரசியலமைப்பை தமிழ் மக்களுடைய அனுமதியுடன் ஆதரவோடு நிறைவேற்றுவதற்கு துணை போகின்ற செயலாகவே பார்க்கின்றோம்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு நாங்கள் வலியுறுத்துவது தயவு செய்து எமது மக்களுக்கு மோசமான செயலை செய்யாதீர்கள்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின்
செயலாளர் சுமந்திரன் தான் உருவாக்கிய எக்கியராஜ்ய வரைவை தமது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு அவர்களுக்கு தனித்து அழுத்தங்களை கொடுத்து எதிர்க்காமல் பண்ணுவதற்குரிய வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியாவது அதை எதிர்த்து செயற்பட வேண்டும்.

சுமந்திரன் போன்ற தரப்புகளுக்கு துணை போகின்ற வகையில் ஏக்யராஜ்ய வரைபை நிறைவேற்றுவதற்கு செயல்படக்கூடாது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோடோ தமிழ் தேசியப் பேரவையோடோ ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பயணிக்க விருப்பமில்லாவிடின் பகிரங்கமாக வெளியேற முடியும். நாம் தவறாக நினைக்கப் போவதில்லை. கொள்கையில் நாம் உறுதியாக உள்ளோம்.

இதற்கு பிறகும் 13 பற்றி மக்கள் மத்தியில் கொண்டு போய் கருத்தை விதைக்கிறது என்பது முழுக்க முழுக்க சுமந்திரன் உருவாக்கிய அரசியல் வரைவை கொண்டு ஒற்றையாட்சிக்குள்முடக்குகின்ற நிகழ்ச்சி நிரலுக்கு துணை போகின்ற உண்மையாக ஒத்துழைக்கின்ற செயலாகவே நாங்கள் பார்க்கிறோம்.

38 வருடமாக நடைமுறையில் இல்லாத அரசியல் அமைப்பு விவகாரத்தை நடைமுறைப்படுத்த கேட்கின்றோம் என்று சொன்னால் எந்த அளவு தூரத்துக்கு அது பிரயோசனமற்றது என்பது அந்த கோரிக்கையிலே வெளிவருகிறது. இந்திய இலங்கை ஒப்பந்தத்தை தமிழ் மக்கள் நிராகரிக்கவில்லை. இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் இருக்கக்கூடிய அம்சத்தை உண்மையை தீர்வாக நடைமுறைப்படுத்துவதாக இருந்தால் ஒற்றையாட்சியைத் தாண்டிய ஒரு சமஷ்டி ஆட்சியூடாக மட்டும் தான் நடைமுறைப்படுத்த முடியும். இந்தியா தொடர்ந்தும் 13ம் திருத்தத்தை பற்றி கதைப்பது என்பது அர்த்தமற்ற கருத்தாக தான் நாங்கள் கருதுகிறோம் – என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.