;
Athirady Tamil News

பெங்களூரில் மனைவியைக் கொன்ற மருத்துவர்! திருப்புமுனையாக இருந்த சகோதரி

0

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மகேந்திர ரெட்டி (31), தன்னுடைய மனைவியும் தோல் மருத்துவருமான கிருத்திகாவை (28) கொலை செய்த சம்பவம், சகோதரியின் சந்தேகத்தினால்தான் வெளிச்சத்துக்கு வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

பெங்களூரைச் சேர்ந்த இளம் மருத்துவர் கிருத்திகா, ஏப்ரல் 24ஆம் தேதி திடீரென மரணமடைந்தார். இதில், அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியடைந்தனர். அவருக்கு இருந்த வயிறு சம்பந்தமான பிரச்னைக்கு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அதுவும், அவரது கணவரே சிகிச்சையளித்து வந்த நிலையில் அவர் மரணமடைந்ததால், பெற்றோருக்கு சந்தேகம் வரவில்லை. ஆனால், கிருத்திகாவின் சகோதரியும், மருத்துவருமான நிகிதா ரெட்டிக்கு இந்த கதைகள் எதுவும் நம்பும்படி இல்லை. அவர் கிருத்திகாவின் உடல் கூராய்வு செய்யப்பட வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார். ஆனால், அதில் வந்த முதற்கட்ட தகவல்களையும் அவர் ஏற்கவில்லை.

கிருத்திகாவின் உடல் உறுப்புகள் தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட வேண்டும் என்று நடவடிக்கை எடுத்தார். அதில்தான் கிருத்திகா கொலை செய்யப்பட்டது ஆறு மாதங்களுக்குப்பிறகு வெளியான தடயவியல் ஆய்வு முடிவில் தெரிய வந்திருக்கிறது.

ஆய்வில், கிருத்திகா இயற்கையாக மரணமடையவில்லை. அது ஒரு கொலை. அவரது உடல் உறுப்புகளில் அனஸ்தீஸியா எனப்படும் மயக்க மருந்து இருக்கிறது. அதிகப்படியான மயக்க மருந்தால், அவரது நுரையீரல் செயலிழந்து மரணம் ஏற்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இதுநாள் வரை கொலை செய்துவிட்டு சுதந்திரமாகச் சுற்றிக் கொண்டிருந்த மருத்துவர் மகேந்திர ரெட்டி கைது செய்யப்பட்டிருக்கிறார்.

ஏப்ரல் மாதம் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில், ஆறு மாதங்களுக்குப் பிறகு, தடயவியல் முடிவுகள் வெளியானபோதுதான், மிக பயங்கர கொலைச் சம்பவம், அதுவும் கணவரே கொலை செய்திருக்கிறார் என்பது வெளிச்சத்துக்கு வந்தது.

பெங்களூருவில் உள்ள புகழ்பெற்ற மருத்துவமனையில் தோல் மருத்துவராகப் பணியாற்றி வந்தார் கிருத்திகா. விரைவில் தனியாக தோல் மருத்துவமனையைத் திறக்கவிருந்த நிலையில்தான் மரணமடைந்திருக்கிறார். மகள் வாழ்ந்துவந்த வீட்டை, அவரது பெற்றோர் ஆன்மிகப் பணிகளுக்காக தானமளித்து விட்டனர்.

கடந்த 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம்தான் இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. குற்றவாளி மகேந்திரா, அங்குள்ள மிகப்பெரிய மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணராக உள்ளார். தற்போது கைது செய்யப்பட்டு 7 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

அறுவைசிகிச்சைகளின்போது நோயாளிகளுக்கு வழங்கப்படும் மயக்க மருந்தான ப்ரோபோஃபோல், கிருத்திகாவின் உடல் உறுப்புகளில் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிருத்திகா மரணம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், வயிறு சம்பந்தமான பிரச்னைக்கு கிருத்திகாவுக்கு வீட்டில் வைத்தே மகேந்திரா சிகிச்சை அளித்துள்ளார். மரணமடைய இரண்டு நாள்களுக்கு முன்பு, கிருத்திகாவை பெற்றோர் வீட்டுக்கு அழைத்து வந்து ஓய்வு வேண்டும் என்பதால் அங்கேயே விட்டுவிட்டுச் சென்றிருக்கிறார். இரண்டு முறை வீட்டுக்கு வந்து நரம்பில் மருந்து செலுத்தியிருக்கிறார். அடுத்த நாள் காலையில், கிருத்திகா கண் விழிக்கவேயில்லை. மயக்கமடைந்த நிலையில், கிருத்திகாவை, மகேந்திரா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கிறார். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கிருத்திகா ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியிருக்கிறார்கள்.

இதைத் தொடர்ந்து கிருத்திகாவுக்கு ஏற்கனவே பல உடல் நலப் பிரச்னைகள் இருந்ததால், அவர் இறந்துவிட்டதாகவும், தனது மனைவிக்கு உடல் கூராய்வு செய்யக் கூடாது என்றும் மகேந்திரா காவல்துறையிடம் கேட்டுக் கொண்டுள்ளார். அதையே, கிருத்திகாவின் பெற்றோரிடமும் கூறி, அவர்களையும் காவல்துறைக்கு வேண்டுகோள் வைக்க வலியுறுத்தியிருக்கிறார்.

ஆனால், சகோதரி நிகிதாவின் வேண்டுகோள்படி, காவல்துறையினர், கிருத்திகாவின் உடலை உடல் கூராய்வுக்கு அனுப்பி வைத்திருந்தனர். அதில்தான் கிருத்திகா கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

திருமணத்துக்கு முன்பே, கிருத்திகாவுக்கு இரைப்பைக் குடல் தொடர்பான பிரச்னை இருந்துள்ளதாகவும், இது தெரிய வந்ததால் மகேந்திரா மனைவி மற்றும் நோயை மறைத்துத் திருமணம் செய்து வைத்த மாமனார் மற்றும் மாமியார் மீதும் கோபத்தில் இருந்துள்ளார். இதுதான் கொலைக்குப் பின்னணியாக இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.