வியத்நாமில் வரலாறு காணாத கனமழை! வெள்ளத்தில் மூழ்கிய பாரம்பரிய இடங்கள்!
வியத்நாம் நாட்டின் மத்திய மாகாணத்தில் பெய்து வரும் கனமழையால், ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் வரலாற்று சிறப்புடைய பண்டைய தளங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
வியத்நாமில், கடந்த அக்.27 ஆம் தேதி இரவு வரையிலான 24 மணிநேரத்தில், வரலாற்றில் முதல்முறையாக சுமார் 1,085.8 செ.மீ. மழை பெய்தது பதிவாகியுள்ளதாக, வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நேற்று (அக்.28) வியத்நாமின் ஹியூ நகரத்தின் வரலாற்று சின்னமாக அறியப்படும் பெர்ஃபியூம் நதியின் நீர்மட்டம் 4.62 மீட்டர் (15 அடியாக) உயர்ந்துள்ளது.
இதேவேளையில், யுனெஸ்கோவால் பட்டியலிடப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க ஹோய் நகரத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. இதனால், அப்பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
இத்துடன், வியத்நாமின் வடக்கு திசையில் உள்ள ஹனோய் மற்றும் தெற்கு திசையில் உள்ள ஹோ சி மின் ஆகிய நகரங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. இதனால், ஆயிரக்கணக்கான பயணிகள் அவதிக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக, வியத்நாம் வெள்ள அபாயமிக்க நாடு என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும், அந்நாட்டின் பெரும்பாலான மக்கள் அதிக வெள்ள அபாயமுள்ள பகுதிகளில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.