;
Athirady Tamil News

சூடானில் 460 பேரைக் கொன்ற துணை ராணுவப் படை!

0

சூடான் நாட்டில், எல் – ஃபேஷர் நகரத்தைக் கைபற்றிய துணை ராணுவப் படையினர் அங்குள்ள மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் உள்பட 460 பேரைக் கொன்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சூடானில், அரசுக்கு எதிரான உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வரும் துணை ராணுவப் படை எல் – ஃபேஷர் நகரத்தைக் கைபற்றி அங்குள்ள மக்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்டு வருவதாக ஐ.நா. உள்ளிட்ட அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்த நிலையில், வடக்கு தர்ஃபூர் மாகாணத்தின் தலைநகர் எல் – ஃபேஷரில் உள்ள சௌதி மகப்பேறு மருத்துவமனையில், நேற்று முன்தினம் (அக். 28) துணை ராணுவப் படை வீரர்கள் அத்துமீறி நுழைந்தனர்.

பின்னர், அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் என சுமார் 460-க்கும் அதிகமான மக்களைச் சுட்டுக்கொன்றதாக, உலகச் சுகாதார அமைப்பின் உயர் அதிகாரி டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், தெரிவித்துள்ளார்.

இந்தப் படுகொலையை சூடானின் மருத்துவர்கள் அமைப்பு உறுதி செய்துள்ள நிலையில், துணை ராணுவப் படை வீரர்கள் அத்துமீறலில் ஈடுபட்டதை ஒப்புக்கொள்வதாகவும், இதுகுறித்த விசாரணை துவங்கப்பட்டுள்ளதாகவும் துணை ராணுவப் படையின் தளபதி ஜெனரல் முகமது ஹம்தான் டகலோ தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இதுபற்றிய விரிவான தகவல்களை அவர் வெளியிடவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 3 ஆவது மிகப் பெரிய ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் துணை ராணுவப் படை உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வருகின்றது. இந்தப் போரில், இதுவரை ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.