மீன்பிடி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்
கடற்றொழில்,நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் ஏற்பாட்டில் கடந்த மாதம் நடைபெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக வடக்கு மாகாண மீன்பிடி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் வடமாகாண, விவசாயமும் கமநல சேவைகள் கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி, நீர்விநியோக மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் சண்முகராஜா சிவஸ்ரீ தலைமையில், அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் பங்குபற்றுதலுடன்(30.10.2025) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண மீன்பிடித்துறை அபிவிருத்தி சார்பாக கடந்த கால திட்டங்களும் எதிர்காலத்தில் (2026) நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்கள் மற்றும் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக மாவட்ட ரீதியாக கலந்துரையாடப்பட்டது.
இக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர், இக் கலந்துரையாடல் வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் மீன்பிடித் தொழிலில் எதிர்நோக்கின்ற பிரச்சினைகளையும் அதேவேளை அடுத்த வருடம் எவ்வாறான திட்டங்களை நடைமுறைப்படுத்தலாம் என்பது தொடர்பாக கலந்துரையாடப்படுவதாகவும்,
மேலும் யாழ் மாவட்டத்தை பொறுத்த வரையில் மக்களுடைய பிரதான தொழில்களிலே விவசாயம் மற்றும் கடல் தொழில் மிக முக்கிய இடத்தில் இருப்பதாகவும், நன்னீர் மீன் பிடி சார்ந்த ஏற்பாடுகள் மிக குறைந்தளவு இருந்தாலும் வடக்கு மாகாணத்தில் உள்ள ஏனைய மாவட்டத்தின் கடல் வளங்களோடு நன்னீர் வளமும் கொண்டதாக காணப்படுவதாகவும், அந்த வகையில் தொழில்சார் பொருளாதார ரீதியான முரண்பாட்டுக்கு இந்த கடற்தொழில் மற்றும் நன்னீர் மீன்பிடி என்பது ஒரு ஆரோக்கியமான விடயமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், அந்த வகையில் மாவட்ட அரசாங்க அதிபர் என்ற ரீதியில் ஏனைய மாவட்டங்களில் இத்தகைய செயற்பாடுகள் மாவட்ட ரீதியாக ஆராயப்படுகின்ற போது அதற்குரிய பிரச்சினைகளை இலகுவாக தீர்க்கக் கூடியதாக இருக்கும் எனவும் மீன்பிடி அமைச்சராக தமிழ் பேசுகின்ற அமைச்சர் இராமலிங்ம் சந்திரசேகர் அவர்கள் இருப்பது பிரச்சினைகளை இலகுவாக அடையாளம் கண்டு இலகுவில் அவ்வாறான பிரச்சனைகளை தீர்ப்பதற்கு உதவியாக இருப்பதாகவும், கடந்த வாரம் கடல் சார்ந்த பிரச்சினைகள் தொடர்புடைய சம்மேளனங்கள் சங்கங்களின் தலைவர்கள் அழைக்கப்பட்டு அவர்களுடைய பிரச்சனைகள் குறைகளை கேட்டறிந்து தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் அமைச்சர் தலைமையில் எடுக்கப்பட்டதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
மேலும், அதிகாரிகள் கடற்தொழிலாளர்களின் பிரச்சினைகளை இணைந்து தீர்ப்பதனூடாக வாழ்வாதாரத்தை மேம்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தக் கூடியதாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.|
மேலும், கடற்தொழிலில் ஈடுபடுபவர்கள் பல்வேறுபட்ட நெருக்கடிகளை எதிர்நோக்குவதாகவும் இந்திய ரோலர்களின் அத்துமீறல்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் சர்வதேச ரீதியாக காணப்படுவதாகவும் இது தொடர்பாக அமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.
மேலும், அதிகாரிகள் மீனவர்களின் பிரச்சினைகளை அணுகி அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை அந்த மட்டத்திலேயே தீர்ப்பதன் ஊடாக அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்பாடடையச் செய்யலாம் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் வட மாகாண விவசாய அமைச்சு உள்நாட்டு மீன்பிடி அலகின் பணிப்பாளர் ,மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், வட மாகாண உள்நாட்டு மீன்பிடிஉதவி இயக்குநர் (NAQDA -தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு மேம்பாட்டு ஆணையம்) மாவட்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளர், யாழ்ப்பாணம், கிளிநொச்சி , முல்லைத்தீவு, வவுனியா, மன்னாா் மாவட்ட கடல்சாா் மீன்பிடி உதவி இயக்குநர்கள்,வடமாகாண விவசாய அமைச்சின் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

