ராஜஸ்தான்: சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் சுற்றுலா வேன் மோதியதில் 15 பக்தர்கள் பலி!
ராஜஸ்தானில் சுற்றுலா வேன் விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்தனர். ராஜஸ்தானின் பைகானெர் அருகே கோலயாத் பகுதியிலிருந்து பாரத் மாலா நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த டெம்போ டிராவலர் வேன் ஒன்று மடோடா கிராமம் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனம் ஒன்றில் படுவேகத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அந்த வேனிலிருந்தவர்களில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு ஓசியான் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்கள் புனித யாத்திரைக்குச் சென்ற பக்தர்கள் என்று அடையாளம் காணப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஜோத்பூரிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக ஜோத்பூர் மாவட்ட ஆட்சியர் ஸ்வேதா சௌஹான் தெரிவித்தார்.