;
Athirady Tamil News

மேயர் தேர்தலில் ஆளும் குடியரசுக் கட்சி படுதோல்வி: “எமது நடவடிக்கைகளே முக்கிய காரணம்!” – டிரம்ப்

0

வாஷிங்டன்: நியூ யார்க் சிட்டி மேயர் தேர்தல் உள்பட அமெரிக்காவின் முக்கிய பதவிகளுக்கு, செவ்வாய்க்கிழமை( நவ. 4) நடைபெற்ற தேர்தலில் அதிபர் டொனால்ட் டிரம்ப் சார்ந்துள்ள ஆளும் குடியரசுக் கட்சி பெரும்பாலான இடங்களில் தோல்வியைத் தழுவியது. இந்த நிலையில், இதற்கான காரணம் என்ன? என்பதை டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.

வெள்ளை மாளிகையின் தலைமை நாற்காலியில்(அமெரிக்க அதிபர் பதவி) இரண்டாவது முறையாக சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் டொனால்ட் டிரம்ப் அதிபராகப் பதவியேற்ற பின் நடைபெறும் முதல் பொதுத் தேர்தல் இது என்பதால் கூடுதல் கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில், தேர்தல் முடிவுகளில் அவர் சார்ந்த குடியரசுக் கட்சியின் மீதான அதிருப்தி வாக்காளர்களிடையே நிலவுவதை தெளிவாகப் பிரதிபலித்துள்ளது.

நியூ யார்க் சிட்டி மேயர் தேர்தலில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஸோரன் மம்தானி மக்களின் பெருவாரியான ஆதரவைப் பெற்றார். அதே கட்சியைச் சேர்ந்த மிக்கி ஷெரில் நியூ ஜெர்சி ஆளுராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அதேபோல, அக்கட்சி வேட்பாளரும் இந்திய வம்சாவளி நபருமான கஸாலா ஹஷ்மி விர்ஜீனியாவின் துணைநிலை ஆளுநராகவும், அபிகெயில் ஸ்பேன்பெர்கெர் விர்ஜீனிய ஆளுநராகவும் தேர்வாகி மக்களின் நம்பிக்கையைச் சம்பாதித்துள்ளனர்.

இந்த நிலையில், தேர்தல் தோல்வி குறித்து தமது ட்ரூத் சோசியல் சமூக ஊடகத் தளத்தில் பதிவிட்டுள்ள டொனால்ட் டிரம்ப், என்ன தெரிவித்திருக்கிறார் தெரியுமா?

‘வாக்குப்பதிவில் டிரம்ப் இல்லை. அரசு நிர்வாகமும் முடங்கியுள்ளது. வாக்குச்சாவடிகளிலிருந்து வரும் தகவல்களின்படி, மேற்குறிப்பிட்ட இவ்விரு காரணங்களுமே குடியரசுக் கட்சி வேட்பாளர்கள் இந்தத் தேர்தலில் தோல்வியடையக் காரணமாகும்’ என்று தெரிவித்துள்ளார்.

அதிபர் டிரம்ப்பின் அதிரடி நடவடிக்கைகளால் அமெரிக்காவில் அரசு நிர்வாக முடக்கம் முந்தைய சாதனைகளைத் தகர்த்து 36-ஆவது நாளை எட்டியுள்ளது கவனிக்கத்தக்கது. இன்னொரு பதிவில் அவர், ‘வாக்காளர் சீர்திருத்த நடவடிக்கைகள் தேவை’ என்று தமது கட்சியினருக்குச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே, தேர்தலில் வாகை சூடியபின், நியூ யார்க் சிட்டி மேயர் பதவியை அலங்கரிக்க உள்ள ஸோரன் மம்தானி ஆற்றிய உரையில், டிரம்ப்பை நேரடியாக விமர்சித்துப் பேசியிருப்பது டிரம்ப்பை எரிச்சலூட்டியுள்ளதை அவரது சமூக ஊடகத் தளப் பதிவுகள் வெளிக்காட்டத் தவறவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.