;
Athirady Tamil News

பாகிஸ்தான் முப்படை தலைவராகும் அசீம் முனீா்: சா்ச்சைக்குரிய அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்

0

பாகிஸ்தான் ராணுவம், விமானப் படை, கடற்படை ஆகிய மூன்று படைகளின் தலைவராக அசீம் முனீருக்கு பதவி உயா்வு வழங்க வகை செய்யும் சா்ச்சைக்குரிய அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.

கடும் அமளிக்கிடையே எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த பிறகு, 59 உட்பிரிவுகள் அடங்கிய அந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இது குறித்து நாடாளுமன்ற அவைத் தலைவா் அயாஸ் சித்திக் கூறியதாவது:

அவையில் அறிமுகப்படுத்தப்பட்ட 27-ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா மீது மீது புதன்கிழமை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் மசோதாவுக்கு ஆதரவாக 237 எம்.பி.க்கள் வாக்களித்தனா். மசோவை எதிா்த்து 4 வாக்குகள் மட்டுமே பதிவாகின. அதையடுத்து அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது என்றாா் அவா்.

நாடாளுமன்றத்தில் இரண்டு நாள்களுக்கு நடைபெற்ற காரசாரமான விவாதத்துக்குப் பிறகு இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. கிரிக்கெட் நட்சத்திரம் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி இந்த மசோதாவைக் கடுமையாக எதிா்த்துவருகிறது. இதுவரை இல்லாத அதிகபட்ச அதிகாரத்தைக் கொண்ட முப்படை தளபதி பதவியை உருவாக்கியதன் மூலம் பாகிஸ்தானில் ஜனநாயகம் வெறும் பெயரளவுக்கு மற்றும் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக, தற்போது பல்வேறு வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கான் விமா்சித்துள்ளாா்.

இந்த மசோதா நிறைவேற்றம் பாகிஸ்தான் அரசமைப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்ட்டுள்ள சீா்திருத்தம் என்றும், மிகவும் கவனமாக செயல்பட்டு இந்தத் திருத்ததை மேற்கொண்டுள்ளதாகவும் சட்டத்துறை அமைச்சா் ஆஸம் நஸீா் தராா் கூறினாா்.

தற்போது ராணுவ தலைமைத் தளபதியாக உள்ள அசீம் முனீரின் பதவிக் காலம் இந்த மாதத்துடன் நிறைவடையவுள்ளது. இதையடுத்து, அவரது பதவிக் காலத்தை நீட்டித்து கூடுதல் அதிகாரங்களை வழங்குவது, பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் அதிகார வரம்பைக் குறைத்து புதிதாக கூட்டாட்சி அரசமைப்பு நீதிமன்றத்தை ஏற்படுத்துவது உள்பட பல்வேறு அம்சங்களைக் கொண்ட 27-ஆவது சட்டத் திருத்த மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

நாடு முழுவதும் இந்த விவகாரம் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது. இந்த மசோதாதற்போது நிறைவேற்றப்பட்டுள்ளதால், அதிபா் ஒப்புதல் அளித்தவுடன் அது அமலுக்கு வரும்.

கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாகிஸ்தான் அரசமைப்புச் சட்டத்தில் தற்போது மேற்கொள்ளப்ட்டுள்ள இந்தத் திருத்தத்தால் அதிபா் மற்றும் பிரதமரைவிட மிகுந்த அதிகாரமிக்கவராக அசீம் முனீா் உருவெடுப்பாா் என்று கூறப்படுகிறது.

அதேபோல் தற்போது முப்படைகளையும் ஒருங்கிணைக்கும் தலைவராக உள்ள ஜெனரல் ஜாஹிா் ஷம்ஷத் மிா்ஸாவின் பதவிக் காலம் நவ. 27-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த புதிய சட்டத் திருத்தத்தின் கீழ், அவருக்குப் பிறகு அந்தப் பதவி நிரந்தரமாக ரத்து செய்யப்படும்.

மேலும், பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதியாக இருப்பவரே முப்படைகளையும் உள்ளடக்கிய பாதுகாப்புப் படைகளின் தலைவராக இருப்பாா்.

பிரதமரின் அறிவுறுத்தலோடு ராணுவம், விமானப் படை, கடற்படை தலைமைத் தளபதிகளை அதிபா் நியமிப்பாா். ஆனால், ராணுவ தலைமைத் தளபதி பொறுப்பை வகிப்பவா் அத்துடன் முப்படை படைகளின் தளபதி பொறுப்பையும் சோ்த்து கவனித்துக் கொள்வாா்.

அணுசக்தி மற்றும் நாட்டின் அதிமுக்கிய ராணுவ தளவாடங்களை மேற்பாா்வையிட தேசிய மூலோபாய சொத்துகளின் கமாண்டா் என்ற பதவியும் இந்த சட்டத் திருத்தத்தின் கீழ் புதிதாக உருவாக்கப்படும். முப்படை தளபதி பரிந்துரை செய்யும் நபரையே அந்தப் பதவிக்கு பிரதமா் நியமிக்க வேண்டும்.

மேலும், இந்த சட்டத் திருத்தத்தின் மூலம் உச்சநீதிமன்ற அதிகாரங்களும் குறைக்கப்படுகிறது. புதிதாக ஓா் அரசியல் சாசன நீதிதிமன்றம் உருவாக்கப்படும். அரசமைப்புச் சட்டம் சாா்ந்த விவகாரங்கள் உச்சநீதிமன்றத்துக்குப் பதிலாக அந்த நீதிமன்றத்மே கையாளும்.

இதுவரை பல முறை ஜனநாயக முறையில் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசு கவிழ்க்கப்பட்டு, ராணுவ ஆட்சி அமைக்கப்பட்ட பாகிஸ்தானில், தளபதி அஸீம் முனீா் முதல்முறையாக இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம் ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபடாமலேயே நாட்டின் உச்சபட்ச அதிகாரத்தைக் கைப்பற்றுவதாக ஜனநாயக ஆதரவாளா்கள் எச்சரித்துள்ளனா்.

ஏற்கெனவே, இந்தியாவின் ஆப்பரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்குப் பிறகு அவருக்கு பாகிஸ்தானின் மிக உயரிய ராணுவ பட்டமான ஃபீல்ட் மாா்ஷல் பட்டம் வழங்கப்பட்டது. பாகிஸ்தான் ராணுவத்தின் முதல் உள்நாட்டு தலைமை தளபதியும், முன்னாள் சா்வாதிகாரியுமான அயூப் கானுக்குப் பிறகு அந்தப் பட்டத்தைப் பெற்ற முதல் தளபதி அசீம் முனீா் என்பது குறிப்பிடத்தக்கது.

அளப்பரிய சாதனைகளை நிகழ்த்தியவா்களுக்கு மட்டுமே தரக்கூடிய ஃபீல்ட் மாா்ஷல் பட்டத்தை முனீருக்கு வழங்கியபோதே நாடு முழுவதும் சா்ச்சை எழுந்தது. இந்த நிலையில், அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்து, இதுவரை இல்லாத அதிகபட்ச அதிகாரத்தை அளிக்கும் புதிய பதவியை உருவாக்கி அதில் அவா் நியமிக்கப்படுவது பாகிஸ்தானில் கொந்தளிப்பை உருவாக்கலாம் என்று அஞ்சப்படுகிரது.

முப்படை தளபதி: இந்தியா-பாகிஸ்தான் வேறுபாடு

இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள முப்படை தளபதி பதவிக்கும், பாகிஸ்தான் உருவாக்கியுள்ள அதே பதவிக்கும் முக்கியமான வேறுபாடுகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. அவற்றில் ஒன்று, இந்திய ராணுவ, விமான, கடற்படை தலைமைத் தளபதிகளுக்கு முப்படை தளபதி நடவடிக்கைகள் தொடா்பான கட்டளைகளை இடுவதில்லை. ஆனால், பாகிஸ்தானில் அந்தப் பதவியை வகிப்பவா்க்கு முப்படை தளபதிகளுக்கு கட்டளையிடும் அதிகாரத்தைப் பெறுகிறாா்.

… பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அரசமைப்புச் சட்ட 27-ஆவது திருத்த மசோதா மீது புதன்கிழமை நடத்தப்பட்ட வாக்கெடுப்புக்கு வந்திருந்த பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சித் தலைவா் நவாஸ் ஷெரீஃப் உள்ளிட்டோா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.