மணமகனுக்கு கத்திக்குத்து… குற்றவாளிகளை ட்ரோன் மூலம் விரட்டிய கேமரா மேன்! – விடியோ
மகாராஷ்டிரத்தின் அமராவதியில் கடந்த திங்கள்கிழமை நடந்த ஒரு திருமண விழா மேடையிலேயே மணமகன் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் அமராவதி பத்னேரா சாலையில் உள்ள சாஹில் லானில் சுஜல் ராம் சமுத்ராவின் திருமண விழாவுக்கான ஏற்பாடுகள் கடந்த திங்கள் கிழமை நடைபெற்றது.
திருமண விழாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த டிஜே பார்ட்டியின் போது அங்கு வந்த ஒருவருக்கும் மணமகன் சுஜல் ராம் சமுத்ராவுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனால், சுஜல் ராம் சமுத்ரா அந்த நபரைப் பிடித்து கீழே தள்ளியுள்ளார்.
இதனால், இருவருக்கு இடையே தகராறு முற்றிய நிலையில், தன்னிடம் இருந்த கத்தியை எடுத்த அந்த மர்ம நபர் சுஜல் ராமின் தொடை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாகக் குத்தியுள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மணமகள், இருவீட்டாரின் குடும்பத்தினர் கத்திக் கூச்சலிட்டு கத்தியால் குத்தியவரைப் பிடிக்க முயன்றனர்.
அப்போது அங்கு நடந்த நிகழ்வுகளை தனது ட்ரோன் கேமரா மூலம் விடியோ எடுத்துக் கொண்டிருந்த கேமரா மேன், கத்தியால் குத்திய குற்றவாளிகளைப் பின்தொடர ஆரம்பித்துள்ளார்.
மணமகனைக் கத்தியால் குத்திவிட்டு ஆரஞ்சு நிற (ஹூடி) டி சர்ட் மற்றும் கருப்பு நிற டி சர்ட் அணிந்த இருவரும் தப்பிக்க முயன்றபோது, மணமகன் உறவினர் ஒருவர் வந்து பிடிக்க முயன்றார். கருப்பு டிசர்ட் அணிந்த நபர் அவரையும் தாக்க பாய்ந்தார்.
பின்னர், இருவரும் தங்கள் பைக்கில் அங்கிருந்து வேகமாக தப்பித்துச் சென்றனர். விழாவைப் படம்பிடிக்க நின்றுகொண்டிருந்த கேமரா மேன், தனது ட்ரோனில் தாக்குதலை படம்பிடித்தது மட்டுமல்லாமல், தப்பியோடிய குற்றவாளியையும் அவரது கூட்டாளியையும் கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர் வரை பின்தொடர்ந்தார்.
இருவரும் தப்பிய நிலையில், விடியோ ஆதாரங்களின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவர் ரகோ ஜிதேந்திர பக்ஷி என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், “கேமரா மேன் விழிப்புடன் வேலை பார்த்துள்ளார். இந்த விடியோ ஆதாரங்கள் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
குற்றம் சாட்டப்பட்டவர் தலைமறைவாக உள்ளார். ஆனால், எங்களிடம் உள்ள காட்சி ஆதாரங்களுடன், அவர் விரைவில் கைது செய்யப்படுவார்” எனத் தெரிவித்தார்.
காயமடைந்த மணமகன் சுஜல், அமராவதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், இப்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
4கே தரத்தில் கேமரா மேன் எடுத்த கத்திக்குத்து சம்பவம் மற்றும் குற்றவாளிகள் தப்பியதன் கழுகுப் பார்வைக் காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாகப் பகிரப்பட்டு வருகின்றன.