தில்லி மட்டுமல்ல, 4 நகரங்கள் குறிவைப்பு! 2,000 கிலோ வெடிமருந்து கொள்முதல்! திடுக்கிடும் தகவல்கள்…
தில்லி மட்டுமல்ல, மொத்தம் நான்கு நகரங்களில் அடுத்தடுத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்ததாக என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், செங்கோட்டை கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய குழுவினர், இந்த தாக்குதல்களை நடத்துவதற்காக ரூ. 20 லட்சம் நிதி திரட்டியதும், 2,000 கிலோ வெடிமருந்து கொள்முதல் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தில்லி செங்கோட்டை அருகே திங்கள்கிழமை மாலை காரின் வெடிகுண்டு வைத்து தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டதில், 12 பேர் கொல்லப்பட்டனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலை நடத்தியது ஃபரிதாபாத்தைச் சேர்ந்த மருத்துவர் உமர் என்பதை விசாரணை அமைப்புகள் உறுதி செய்துள்ளன. மேலும், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், என்ஐஏ உள்ளிட்ட அமைப்புகள் நடத்திய விசாரணையில், மொத்தம் 4 இடங்களில் தொடர் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த உமர் மற்றும் குழுவினர் திட்டமிட்டிருந்தது தெரியவந்திருப்பதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மொத்தம் 8 பயங்கரவாதிகள் இரண்டு பேர் கொண்ட குழுவாகப் பிரிந்து 4 நகரங்களைக் குறிவைத்து, ஒரே நேரத்தில் கார் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதற்காக மருத்துவர்கள் முசம்மில், அதீல், உமர் மற்றும் ஷாஹீன் ஆகியோர் ஒருங்கிணைந்து ரூ. 20 லட்சம் நிதித் திரட்டியதாகவும், செங்கோட்டை தாக்குதலுக்கு முன்னதாக திட்டத்தை செயல்படுத்துவதற்காக இந்த தொகையை உமரிடம் ஒப்படைத்தது தெரியவந்துள்ளது.
குருகிராம், நுஹ் மற்றும் சுற்றுப் பகுதிகளில் இருந்து 2,000 கிலோ என்பிகே (நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம்) வெடிப் பொருள்களை ரூ. 3 லட்சத்துக்கு வாங்கியுள்ளனர். இதனைப் பயன்படுத்தி ஐஇடி வெடிகுண்டுகளைத் தயாரித்துள்ளனர்.
இரண்டு முதல் 4 பேர் கொண்ட சிக்னல் செயலிக் குழுவை உருவாக்கி, இந்த திட்டத்தை பாதுகாப்புடன் உமர் ஒங்கிணைத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021 மற்றும் 2022 -க்கு மத்தியில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் பிரிவான அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்தின் அமைப்புடன் மருத்துவர் முசம்மில்லுக்குத் தொடர்பு ஏற்பட்டுள்ளது புலனாய்வு அமைப்புகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனிடையே, ஹரியாணாவில் உமர் வாங்கிய சிவப்பு நிற ஈகோ ஸ்போர்ட்ஸ் காரைக் காவல்துறையினர் புதன்கிழமை இரவு கண்டுபிடித்து, பறிமுதல் செய்துள்ளனர்.
தற்போது, மேலும் இரண்டு கார்கள் வெடிகுண்டு தற்கொலைத் தாக்குதலுக்குப் பயன்படுத்த உமர் ஏற்பாடு செய்திருக்கலாம் என புலனாய்வு அமைப்புகள் சந்தேகிக்கின்றன. இதனடிப்படையில், பல்வேறு கோணங்களில் விசாரணையைத் துரிதப்படுத்தியுள்ளனர்.
மேலும், பயங்கரவாதத் தாக்குதலுக்காக கைது செய்யப்பட்டுள்ள மருத்துவர்களின் குழுவில் உள்ள அனைவரையும் கண்டுபிடிக்கும் பணியில் புலனாய்வு அமைப்புகள் ஈடுபட்டுள்ளன.