ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம், 2 வெள்ளி வென்ற வீரர் செல்வராசா ரமணன்: அரசாங்க அதிபர் பிரதீபன் கௌரவிப்பு, வாழ்த்து!
ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்த விளையாட்டு வீரா் செல்வராசா ரமணன் அவர்கள் அரசாங்க அதிபரால் கௌரவிப்பு
23வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை சார்பில் 01 தங்கம் மற்றும் 02 வெள்ளிப்பதக்கத்தினை வென்று சாதனை படைத்த மாவட்ட விளையாட்டு வீரா் செல்வராசா ரமணன் அவர்களை இன்றைய தினம் (13.11.2025) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்ற கெளரவிப்பு நிகழ்வில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் பொன்னடை போர்த்தி மலர்மாலையிட்டு கௌரவித்தார்.
இவ் கெளரவிப்பு நிகழ்வில் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர், 23வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் 3000 விளையாட்டு வீர வீராங்கனைகள் பங்குபற்றியிருந்ததாகவும், அதில் இலங்கையை சேர்ந்த 250 வீர வீராங்கனைகள் பங்குபற்றியிருந்ததாகவும் குறிப்பிட்டு, அதில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரேயொரு தமிழராக செல்வராசா ரமணன் பங்குபற்றி உயரம்பாய்தலில் தங்கப்பதக்கத்தை பெற்று சாதனை படைத்தமையுடன் முப்பாய்ச்சல் ,கோலூன்றிப்பாய்தல் போட்டிகளிலும் வெள்ளிப்பதக்கத்தை பெற்றுக்கொண்டமை பெருமகிழ்ச்சியை அளிப்பதாகவும் அதற்காக தமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். மேலும், இவ்வாறானதொரு பல்வேறு நாடுகள் பங்குபற்றியஆசியப் போட்டியில் வெற்றியீட்டுவது என்பது ஓர் கடினமான விடயம் எனவும், தான் ஒரு சர்வதேச விளையாட்டு வீரனாக இருப்பதுடன் இளம்சந்ததியினருக்கு நல்லதொரு நிலையை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் விளையாட்டுத்துறை சாா்ந்த பயிற்சிகளை இலவசமாக பயிற்றுவித்து வரும் விளையாட்டு பயிற்சியாளராகவும் இருந்து வருகிறார் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்து,மேலும் பல சர்வதேச போட்டிகளில் பங்குபற்றி மேன்மேலும் வெற்றிகளை பெற தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.
மேலும் அரசாங்க அதிபர் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் விளையாட்டு பயிற்சிகளில் ஈடுபடும் வீர வீராங்கனைகள் பல சவால்களை எதிர்நோக்குவதாகவும் அதற்கமைய அமைச்சரவைக் கூட்டத்தில் யாழ் மாவட்டத்தில் உள்ளக விளையாட்டரங்கு அமைப்பதற்காக ரூபா 170 மில்லியன் நிதி ஒதுக்கீடு இவ் வருடம் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அதற்கான முன்னேற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
இக் கௌரவிப்பு நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் கே. சிவகரன் , மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பா.ஜெயகரன் பிரதம கணக்காளர் எஸ். கிருபாகரன் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதுடன் ஸ்புட்னிக் விளையாட்டுக்கழக வீரர்கள் மற்றும் மாவட்ட செயலக விளையாட்டு உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.




