;
Athirady Tamil News

ஆம்புலன்ஸ் தீப்பற்றி எரிந்து கோரவிபத்து: பச்சிளம் குழந்தை உள்பட 4 பேர் பலி

0

காந்தி நகர்,

குஜராத் மாநிலம் ஆரவல்லி மாவட்டம் மோடசா பகுதியை சேர்ந்த பெண்ணுக்கு நேற்று குழந்தை பிறந்தது. பச்சிளம் குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் நேற்று இரவே மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்சில் அகமதாபாத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். ஆம்புலன்சில் குழந்தையின் தந்தை, செவிலியர்கள், டாக்டர் உள்பட 7 பேர் பயணித்தனர்.

இந்நிலையில், மோடசா – தன்சுரா நெடுஞ்சாலையில் நள்ளிரவு சென்றுகொண்டிருந்தபோது ஆம்புலன்சில் திடீரென தீப்பற்றியது. உடனடியாக ஆம்புலன்சை டிரைவர் நிறுத்தியுள்ளார். ஆம்புலன்சில் இருந்து டிரைவர் உள்பட 3 பேர் கிழே இறங்கியுள்ளனர். ஆனால், தீ மளமளவென ஆம்புலன்ஸ் முழுவதும் பரவியுள்ளது. இந்த சம்பவத்தில் ஆம்புலன்சில் பயணித்த பிறந்து ஒருநாளே ஆன பச்சிளம் குழந்தை, குழந்தையின் தந்தை, டாக்டர் உள்பட 4 பேர் உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதையடுத்து விரைந்து சென்ற போலீசார், காயமடைந்த ஆம்புலன்ஸ் டிரைவர் உள்பட 3 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.