;
Athirady Tamil News

ட்ரம்ப் , சல்மான் சந்திப்பு ; உலக அரசியல் தொடர்புகளின் புதிய முயற்சி

0

ஊடகவியலாளர் ஜமால் கஷோகியின் படுகொலைக்குப் பிறகு முதன்முறையாக சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்தித்துள்ளார்.

இதன்போது இளவரசருக்கு உற்சாக வரவேற்பு அளித்ததுடன், கஷோகியின் கொலை பற்றி இளவரசருக்கு “எதுவும் தெரியாது” என்று அமெரிக்க புலனாய்வுத் தகவல்களுக்கு முரணான கருத்தை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்ததாக வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த சந்திப்பில் தன்னுடைய உரையைத் தொடங்கிய ட்ரம்ப், பட்டத்து இளவரசரைப் பற்றி “மனித உரிமைகள் மற்றும் பிற விஷயங்களைப் பொறுத்தவரை” பெருமைப்படுவதாகக் கூறினார்.

அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பு, கஷோகியின் கொலையை பட்டத்து இளவரசரே உத்தரவிட்டதாக முடிவு செய்திருந்தபோதிலும், ட்ரம்ப் 2018 ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தில் சவூதி அரசாங்கத்தை ஆதரித்தார்.

தங்கள் மீதான விமர்சனங்களை, வொஷிங்டனுக்கும் ரியாத்துக்கும் இடையே பிளவை ஏற்படுத்த முயலும் பிரசாரத்தின் ஒரு பகுதியாக இளவரசர் நிராகரித்தார்.

கஷோகியின் படுகொலை தொடர்பான சவூதி விசாரணையை இளவரசர் ஆதரித்தார். இந்த விசாரணையில் ஐந்து பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதையும், இது உள்நாட்டு சீர்திருத்தங்களை உள்ளடக்கியதையும் அவர் குறிப்பிட்டார்.

கஷோகி கொலை தனது மேற்பார்வையின் கீழ் நடந்ததால் “முழுப் பொறுப்பையும்” ஏற்றுக்கொள்வதாக இளவரசர் 2019 இல் கூறியிருந்தாலும், தான் உத்தரவிடவில்லை என்று மறுத்தார்.

கஷோகி மரணம் மற்றும் 9/11 தாக்குதல் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் விமர்சனங்கள் பற்றி, பட்டத்து இளவரசரிடம் கேள்வி எழுப்பிய ஏபிசி நியூஸ் செய்தியாளரை ட்ரம்ப் கடுமையாக சாடினார்.

பட்டத்து இளவரசரின் இந்த வருகை, அவர் மீண்டும் சர்வதேச ராஜதந்திர வட்டாரத்தில் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான ஒரு நகர்வாகப் பார்க்கப்படுகிறது. ட்ரம்ப், பட்டத்து இளவரசரின் வரவேற்பை கோலாகலமான முறையில் ஏற்பாடு செய்தார்.

இராணுவ விமானங்களின் சாகசம், குதிரையில் வந்த அதிகாரிகள் மற்றும் ரோஸ் கார்டன் வழியாக சுற்றுப்பயணம் ஆகியவை இதில் அடங்கும். ட்ரம்ப் மற்றும் பட்டத்து இளவரசர் இருவரும் அமெரிக்காவில் 1 டிரில்லியன் டொலர் முதலீடு செய்வது குறித்து இதன்போது கலந்துரையாடினர்.

இது முன்னர் உறுதியளிக்கப்பட்ட 600 பில்லியன் டொலரை விட அதிகம் என குறிப்பிடப்படுகிறது. இரு தலைவர்களும் பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ட்ரம்ப், சவூதி அரேபியாவுக்கு எப்-35 ஸ்டெல்த் போர் விமானங்களை விற்பனை தயாராக இருப்பதாக இதன்போது உறுதிப்படுத்தினார்.

இது மத்திய கிழக்கில் உள்ள இஸ்ரேலுக்கு (அமெரிக்காவின் அதிநவீன இராணுவ தொழில்நுட்பத்தின் முதன்மைப் பெறுநர்) இருந்த அதிகார சமநிலையை மாற்றக்கூடும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.