;
Athirady Tamil News

கேரளா கஞ்சாவுடன் கைதான தாய் தந்தை மகன் தொடர்பில் விசாரணை முன்னெடுப்பு

0

கேரளா கஞ்சாவுடன் கைதான ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.டபிள்யு.எஸ். நிஷாந்த வெடகே தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை (15) இச் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.இதன் போது தாய் தந்தை மகன் என ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் இச்சோதனை நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட நிலையில் மேலதிக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஏற்கனவே நிந்தவூர் பொலிஸாரினால் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த சந்தேக நபரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் நிந்தவூர் பகுதியில் கஞ்சா கடத்தல் வலையமைப்பை முறியடிக்கும் வகையில் பொலிஸார் விரிவான தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இதன் போது 302 கிராம் கேரளா கஞ்சாவுடன் பெண் கைதானார்.குறித்த கைதான பெண் வீட்டில் கேரளா கஞ்சாவை விற்பனை செய்பவர் என்பதுடன் கைதான பெண் சந்தேக நபரின் தகவலுக்கமைய வீட்டின் பின்னால் நிலத்தடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1.5 கிலோ கேரளா கஞ்சா தொடர் விசாரணையின் போது பிளாஸ்டிக் பீப்பாயில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கேரளா கஞ்சா பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.

அத்துடன் பெண்ணின் சந்தேக நபரான கணவன் இதன்போது கைது செய்யப்பட்டார்.பின்னர் கைதான இருவரும் கொடுத்த தகவலுக்கமைய அப்பகுதியில் போதைப்பொருள் கடத்தல் வட்டத்தின் முக்கிய நபராக அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர்களின் மகன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பொலிஸாரினால் கைதானார்.இவ்வாறு கைதான சந்தேக நபரின் வாக்குமூலத்திற்கமைய அருகிலுள்ள வெற்று காணியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கிலோ 700 கிராம் கேரளா கஞ்சா
பொலிஸாரால் மீட்கப்பட்டது.

அத்துடன் இக்கேரளா கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கைதான ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் தந்தை மகன் உள்ளிட்டோர் விள்க்கமறியல் மற்றும் தடுப்பக்காவல் உத்தரவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இச்சோதனை நடவடிக்கையானது கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் உத்தரவின் பேரில் அம்பாறை பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவின் பேரில் அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் குமாரவின் மேற்பார்வையில் அக்கரைப்பற்று பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் டி.என்.பி தந்த நாணயக்காரவின் நெறிப்படுத்தலில் நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.டபிள்யு.எஸ். நிஷாந்த வெடகே தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நடவடிக்கை நிந்தவூர் பிராந்தியத்தில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த கஞ்சா கடத்தல் வலையமைப்பை முறியடிக்கும் வகையில் மிகப்பெரிய வெற்றியாகும் என்றும் தொடர்ந்தும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.