;
Athirady Tamil News

மோசமாக நடத்தப்படுவதால் பிரித்தானியாவை விட்டு வெளியேறும் புலம்பெயர்ந்த மருத்துவர்கள்

0

பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக வெறுப்பு காட்டப்படுவதால் ஏராளமான மருத்துவர்கள் பிரித்தானியாவை விட்டு வெளியேறிவருவதாக பிரித்தானிய அரசு மருத்துவ அமைப்பு தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவை விட்டு வெளியேறும் புலம்பெயர்ந்த மருத்துவர்கள்
2024ஆம் ஆண்டில், பிரித்தானியாவில் பணியாற்றிவந்த புலம்பெயர் பின்னணி கொண்ட மருத்துவர்களில் 4,880 மருத்துவர்கள் பிரித்தானியாவை விட்டு வெளியேறியுள்ளதாக பொது மருத்துவக் கவுன்சில் தெரிவித்துள்ளது.

அப்படி பிரித்தானியாவை விட்டு வெளியேறியுள்ள மருத்துவர்கள் எண்ணிக்கை, கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 26 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

புலம்பெயர்ந்தோர் என்பதற்காக மோசமாக விமர்சிக்கப்படுதல் மற்றும் மோசமாக நடத்தப்படுதலே இந்த மருத்துவர்கள் பிரித்தானியாவை விட்டு வெளியேறக் காரணம் என எச்சரிக்கிறார்கள் NHS தலைவர்களும், மூத்த மருத்துவர்களும்.

இப்படி வெளிநாட்டில் கற்ற மருத்துவர்கள் NHSஐ விட்டு வெளியேறி வரும் விடயம் கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது எனக் கூறும் NHS Providers அமைப்பின் தலைமை நிர்வாகியான டேனியல் (Daniel Elkeles), வெளிநாட்டு மருத்துவர்களை பணிக்கு எடுத்திராவிட்டால் NHS என்னும் அமைப்பே இருந்திருக்காது என்கிறார்.

ஆனால், இப்படி மோசமாக நடத்தப்படுவதற்கு பதிலாக வேறெங்காவது சென்றுவிடலாம் என முடிவு செய்து பிரித்தானியாவை விட்டு வெளியேறிவருகிறார்கள் புலம்பெயர்ந்த மருத்துவர்கள்.

அவர்களுக்கு எங்கு சென்றாலும் வேலை கிடைக்கும் என்பதையும் மறுக்கமுடியாது. ஆனால், அவர்கள் வெளியேறுவது பிரித்தானிய மருத்துவ அமைப்புக்கு பேரிழப்பாகும்.

ஏற்கனவே புலம்பெயர்ந்த செவிலியர்களுக்கு எதிராக கடும் இனவெறுப்பு காட்டப்படுவதாக The Royal College of Nursing அமைப்பு கடந்த மாதம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது மருத்துவர்களும் மோசமாக நடத்தப்படுவதாக கூறப்படும் விடயம், பிரித்தானியா மீண்டும் பழைய இனவெறுப்பு காலங்களுக்கே திரும்புவதை காட்டுவதாக அமைந்துள்ளது.

இதை, பிரித்தானிய சுகாதாரச் செயலரான வெஸ் ஸ்ட்ரீட்டிங்கே கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது!

You might also like

Leave A Reply

Your email address will not be published.