;
Athirady Tamil News

யாழ்ப்பாண மாவட்ட உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நடும் விழா

0

வடக்கின் அபிவிருத்தி சார்ந்து எம்மால் முன்வைக்கப்படும் கோரிக்கைகளைத் தற்போதைய அரசாங்கம் மிகவும் சாதகமாகவே பரிசீலித்து வருகிறது. எனவே, இந்தச் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்தி, விளையாட்டுத் துறைக்குத் தேவையான வளங்களைப் பெற்று, எமது வீரர்கள் சர்வதேச அரங்கில் மிளிர வேண்டும், என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள யாழ்ப்பாண மாவட்ட உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நடும் விழா இன்று ஞாயிற்றுக்கிழமை (23.11.2025) யாழ்ப்பாணம் பழைய பூங்கா வளாகத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னரே வடக்கு மாகாணத்துக்கு அதிகளவான நிதி ஒதுக்கப்பட்டு, பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நான் யாழ். மாவட்டச் செயலராகப் பணியாற்றிய காலத்திலிருந்தே, இந்த மாவட்டத்துக்கு ஒரு உள்ளக விளையாட்டு அரங்கு அமைய வேண்டும் எனப் பெரிதும் விரும்பினேன். அதற்காகப் பல தடவைகள் முயற்சிகளை மேற்கொண்ட போதும், அக்காலப்பகுதியில் அது கைகூடியிருக்கவில்லை. ஆனால், எனது அந்த நீண்டகாலக் கனவை இந்த அரசாங்கம் இன்று நிறைவேற்றியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது, என்றார்.

நிகழ்வில் உரையாற்றிய போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்க, யாழ். மாவட்டத்துக்கான இவ்வருட நிதி ஒதுக்கீட்டில் விளையாட்டுத் துறையின் மேம்பாட்டிற்காகவே அதிகளவாக 170 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று அடிக்கல் நடுகை செய்யப்படும் இந்த உள்ளக விளையாட்டு அரங்கின் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு, 2026ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதி விளையாட்டு வீரர்களிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்படும், என உறுதியளித்தார்.

இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சுனில் குமார கமகே, நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபன், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரின் இணைப்பாளர் சு.கபிலன் மற்றும் விளையாட்டுத்துறை உத்தியோகத்தர்கள், வீரர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.