;
Athirady Tamil News

சிவப்பு கம்பள வரவேற்பில் தேநீர் குவளையுடன் பிரதமர் மோடி.. காங்கிரஸ் பகிர்ந்த ஏஐ விடியோவால் சர்ச்சை!

0

சிவப்பு கம்பள வரவேற்பில் பிரதமர் நரேந்திர மோடி தேநீர் குவளையுடன் உருவாக்கப்பட்டுள்ள செய்யறிவு விடியோவை காங்கிரஸ் தலைவர் ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

தில்லியைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவரான ராகினி நாயக் என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி தொடர்பான செய்யறிவு விடியோ ஒன்றை பகிர்ந்து, ‘யார் இதை செய்தது?’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

அந்த விடியோவில், சிவப்பு கம்பளத்தில் நடந்து வரும் பிரதமர் மோடி, தன்னுடைய ஒரு கையில் தேநீர் குவளையையும் மற்றொரு கையில் தம்ளர்களை வைத்திருப்பது போலவும், ச்சாய்… ச்சாய் போலேயே.. (யாருக்கும் தேநீர் வேண்டும் – என ஹிந்தியில்..) என சத்தமிட்டுக் கொண்டு வருவது போலவும் உருவாக்கப்பட்டிருந்தது.

இதை ராகினி நாயக் பகிர்ந்த நிலையில், இந்த விவகாரம் சர்ச்சையாக வெடித்தது. இதற்கு பாஜக தரப்பில் பலரும் தங்கள் விமர்சனத்தை முன்வைத்துள்ளனர்.

இதுதொடர்பாக பாஜக செய்தித்தொடர்பாக ஷேசாத் பூனவல்லா, ராகினியின் பதிவை மறுப்பதிவிட்டு, “ஏழைப் பின்னணியில் இருந்து வந்த ஓபிசி சமூகத்தைச் சேர்ந்த காம்தார் (கீழ்த்தட்டு சமூகம்) பிரதமரை, நாம்தார் (உயர்குடியினர்) காங்கிரஸால் பொறுத்துக்கொள்ள முடியாது.

அவர்கள் இதற்கு முன்பும் இதுபோன்று கேலி செய்துள்ளனர். 150 முறைக்கு மேல் அவமானப்படுத்தியுள்ளனர். பிகாரில் அவரது தாயாரை சித்திரித்து விடியோ வெளியிட்டு அவமானப்படுத்தினர். மக்கள் அவர்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

குஜராத்தைச் சேர்ந்தவரான பிரதமர் நரேந்திர மோடி, தனது சிறுவயதில் வாத்நகர் பகுதியில் தேநீர் விற்றதாகக் கூறப்படுகிறது. இதனையே காங்கிரஸ் தலைவர்களும், அக்கட்சியைச் சேர்ந்தவர்களும் பிரதமர் மோடியை கிண்டல் செய்ய தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தியும்கூட சில ஆண்டுகளுக்கு முன்னதாக பிரதமர் மோடி விமர்சிக்க ‘ச்சாய் வாலா’ என்ற வார்த்தைப் பயன்படுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதேபோன்று, 2014 ஆம் ஆண்டு ஜனவரியில் பாஜகவின் அப்போதைய பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் அய்யர் ‘ச்சாய் வாலா’ என்று திட்டியது, பொதுத் தேர்தலில் அப்போதைய ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது நினைவுகூரத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.