மெக்சிகோவில் நிலநடுக்கம்! அதிபரின் முதல் செய்தியாளர் சந்திப்பில் இடையூறு!
மெக்சிகோ நாட்டில் 6.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெக்சிகோவின் குவெரெரோ மாகாணத்தின் சான் மார்கோஸ் நகரத்தை மையமாகக் கொண்டு நேற்று (ஜன. 2) மதியம் 1 மணியளவில் 6.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக, அந்நாட்டின் தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால், அங்குள்ள கட்டடங்கள் அதிர்வுக்குள்ளாதைத் தொடர்ந்து மெக்சிகோ சிட்டி, அகாபுல்கோ நகரங்களில் இருந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
இத்துடன், இந்த நிலநடுக்கத்தால் மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷெயின்பாமின் 2026 ஆம் ஆண்டின் முதல் செய்தியாளர் சந்திப்பிற்கு இடையூறு ஏற்பட்டது.
நிலநடுக்கத்தால் அங்குள்ள அபாய ஒலிகள் ஒலிக்கத் துவங்கியதுடன் அதிபர் ஷெயின்பாம் தனது பேச்சை பாதியில் நிறுத்தி அரங்கில் இருந்த அனைவரும் வெளியேற அறிவுறுத்தினார். அதிர்வுகள் முடிவுக்கு வந்தவுடன் மீண்டும் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலநடுக்கத்தால் சில கட்டடங்கள் சேதமடைந்த புகைப்படங்கள் மட்டும் வெளியாகியுள்ளன. ஆனால், பாதிப்புகள் குறித்து முழுமையான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும், பின்அதிர்வுகள் ஏற்படக் கூடும் என்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.