உத்தரப் பிரதேசம்: பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபரைக் கொன்ற இளம்பெண் கைது!
உத்தரப் பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபரைக் கொன்ற இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம், பந்தா மாவட்டத்தில் உள்ள முர்வால் கிராமத்தில் 50 வயதுடைய நபரை கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொன்றதாக 18 வயது இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இளம்பெண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் அவர்கள் மேலும் கூறினர்.
மாவட்ட காவல் அதிகாரி ராஜேந்திர சிங் ராஜாவத் கூறுகையில், சுக்ராஜ் பிரஜாபதி (50) என்பவரின் உடல், கூர்மையான ஆயுதத்தால் தலையில் ஏற்பட்ட கடுமையான காயங்களுடன் வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் வீடு ஒன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து அதே இரவில் இளம்பெண்ணை கைது செய்தனர்.
குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ஆயுதமும் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையின் போது, அந்த நபர் தனது வீட்டிற்குள் புகுந்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக இளம்பெண் போலீஸாரிடம் கூறினார்.
தன்னை பாதுகாத்துக் கொள்ளும் முயற்சியில், வீட்டில் இருந்த ஆயுதத்தால் அவரை தாக்கியதாகவும், அதன் காரணமாக அவர் பலியானதாகவும் போலீஸார் கூறினர் என்றார்.