;
Athirady Tamil News

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – மக்கள் அவதானம்

0

நாய்கள் கொல்லப்பட்டு இறைச்சிக்காக வெட்டப்பட்டுள்ளமை தொடர்பில் பெரியநீலாவணை போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று குறித்த முறைப்பாட்டினை கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் மேற்கொண்டுள்ளதுடன் நாய்கள் வெட்டப்பட்டு ஆட்டு இறைச்சியுடன் கலப்பதற்காக கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அம் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பெரிய நீலாவணை விஷ்ணு மகா வித்தியாலய மைதானத்தில் உள்ள பனை மரம் ஒன்றில் நாய் ஒன்று கொல்லப்பட்டு கட்டி தொங்கவிடப்பட்டுள்ள நிலையில் உள்ளதுடன் மற்றுமொரு நாய் இறந்த நிலையில் காணப்படுகின்றது.

நேற்று முன்தினம் (01) புது வருட பிறப்பை முன்னிட்டு ஏனைய இறைச்சி வகைகளுடன் கலப்பதற்காக இந்த நாய்கள் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று மக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

மேலும் ரெஜிபோம் பெட்டிகள் உட்பட சந்தேகத்திற்கிடமான பொருட்களும் காணப்படுகின்றது.

இவ்வாறான சம்பவங்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளதுடன் ஆட்டு இறைச்சி போன்று நாய் இறைச்சி விற்பனை செய்த சம்பவங்கள் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக பெரியநீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது என எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.