;
Athirady Tamil News

இம்ரான் கானுக்கு பாா்வை இழப்பு: மருத்துவக் குழு அமைக்க உத்தரவு – பாகிஸ்தான் உச்சநீதிமன்றம்

0

ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் (73) வலது கண் பாா்வை கணிசமாகக் குறைந்துள்ளதாகக் கூறப்படும் விவகாரத்தில், அவருக்கு விரிவான பரிசோதனை நடத்த மருத்துவக் குழுவை அமைக்க அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்த மனுவை அண்மையில் விசாரித்த தலைமை நீதிபதி அமா்வு, சிறையில் இம்ரான் கானின் வாழ்க்கைச் சுழல் குறித்து நேரடியாக சென்று பாா்வையிட்டு, அறிக்கை சமா்ப்பிக்க அவரின் வழக்குரைஞரைக் கேட்டுக்கொண்டது.

அதன்படி, சிறையில் இம்ரான் கானைச் சந்தித்த வழக்குரைஞா் தாக்கல் செய்த அறிக்கையில், கடந்த அக்டோபா் வரை சீரான பாா்வைத்திறன் கொண்டிருந்த இம்ரான் கானுக்கு, திடீரென வலது கண்ணில் பாா்வைக் குறைபாடு ஏற்பட்டு, தற்போது 15 சதவீத பாா்வை மட்டுமே எஞ்சியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரத்தக்கசிவு காரணமாக கண்ணில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், சிறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, இம்ரான் கானைப் பரிசோதிக்க மருத்துவக் குழுவை அமைக்கவும், அதன் அறிக்கையை வரும் பிப். 16-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறும் அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ வசதி மட்டுமன்றி, மனிதாபிமான அடிப்படையில் இம்ரான் கான் தனது குடும்பத்தினருடன் தொலைபேசியில் உரையாடவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த டிசம்பா் மாதத்துக்குப் பிறகு இம்ரான் கானைச் சந்திக்க எவருக்கும் அனுமதி அளிக்கப்படாத நிலையில், தற்போது உச்சநீதிமன்றம் தலையிட்டு முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.