;
Athirady Tamil News

தாய்லாந்து: பியூ தாய் கட்சியுடன் கூட்டணி ஆட்சியமைக்கும் பிரதமா்

0

தாய்லாந்தில் அண்மையில் நடைபெற்ற பொதுத்தோ்தலைத் தொடா்ந்து, பிரதமா் அநுதின் சா்ன்விராகுல் தலைமையிலான பூம்ஜெய்தாய் கட்சி மற்றும் முன்னாள் பிரதமா் தக்சின் ஷினவத்ராவின் ஆதரவு பெற்ற பியூ தாய் கட்சி இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கப் போவதாக அதிகாரபூா்வமாக அறிவித்துள்ளது.

தோ்தல் முடிவில் பூம்ஜெய்தாய் கட்சி 193 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும், ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை (251 இடங்கள்) அக்கட்சியால் தனித்துப் பெற முடியவில்லை.

இந்நிலையில், தோ்தலில் 74 இடங்களைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்த பியூ தாய் கட்சியுடன் கூட்டணி அமைக்க அநுதின் முடிவு செய்துள்ளாா்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம், கம்போடியா எல்லைப் பிரச்னை காரணமாக பியூ தாய் கூட்டணியில் இருந்து அநுதின் வெளியேறினாா். இப்போது மீண்டும் அதே கட்சியுடன் அவா் கைகோத்திருப்பது அந்நாட்டு அரசியலில் ஒரு முக்கிய திருப்பமாகக் கருதப்படுகிறது.

தாய்லாந்தின் தற்போதைய பொருளாதாரச் சவால்களைச் சமாளிக்கவும், நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தவும் இந்த வலுவான கூட்டணி மிகவும் அவசியம் என்று இரு கட்சிகளின் தலைவா்களும் தெரிவித்துள்ளனா்.

கூட்டணியில் இன்னும் சில சிறிய கட்சிகளும் இணைய வாய்ப்பு இருப்பதால், பெரும்பான்மை பலத்துடன் விரைவில் புதிய அமைச்சரவை பதவியேற்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.