வடக்கில் நெருக்கடி ; கடற்றொழிலாளர்களுக்கு வாழ்வாதாரம் முடங்கியது
இலங்கையில் நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக வடபகுதி கடற்றொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
வாராந்தம் வழங்கப்படும் மிகக் குறைந்தளவு மண்ணெண்ணெய் ஒதுக்கீடு காரணமாக, ஆழ்கடல் கடற்றொழிலில் ஈடுபட முடியாமல் அவர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு வாரத்திற்கு 30 லீட்டர் மண்ணெண்ணெய் மட்டுமே வழங்கப்படுவதால், அவர்களால் கரைக்கடல் பகுதிகளில் மட்டுமே மீன்பிடிக்க முடிகிறது. கரைக்கடல் பகுதிகளில் மீன் வளம் குறைந்துள்ளதால், சிறந்த அறுவடைக்கு ஆழ்கடலுக்குச் செல்ல வேண்டியுள்ளது.
ஆனால் தற்போதைய எரிபொருள் ஒதுக்கீடு அதற்குப் போதுமானதாக இல்லை என யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சம்மேளனக் குழு உறுப்பினர் பாக்கியநாதன் றீகன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் ஒரு படகிற்கு வாரத்திற்கு 25 லீட்டர் மண்ணெண்ணெய் மற்றும் அரை லீட்டர் பெட்ரோல் மட்டுமே வழங்கப்படுவதாக வடமாகாண கடற்றொழிலாளர் சங்கத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை கடற்றொழிலாளர்கள் எரிபொருள் இன்றி முடங்கியுள்ள நிலையில், இதனைச் சாதகமாகப் பயன்படுத்தி இந்திய (தமிழ்நாடு) கடற்றொழிலாளர்கள் இலங்கையின் வடக்குக் கடற்பரப்பில் சட்டவிரோத இழுவைப்படகு கடற்றொழிலில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.
மன்னார் வளைகுடாப் பகுதியில் இந்திய கடற்றொழிலாளர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளமை உள்ளூர் கடற்றொழிலாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணக் கடலோரப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கடல் அட்டைப் பண்ணைகள் கடற்றொழிலாளர்களின் தொழிலுக்குப் பெரும் இடையூறாக அமைந்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. முட்கம்பி வலைகளால் கடற்பகுதிகள் வேலி அடைக்கப்பட்டு இந்தப் பண்ணைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இது மீன்களின் பருவகால இடப்பெயர்வு மற்றும் இனப்பெருக்கச் செயற்பாடுகளைப் பாதிப்பதாக கடற்றொழிலாளர்கள்; தெரிவிக்கின்றனர். கடந்த அரசாங்கத்தினால் வடக்கில் சுமார் 500 கடல் அட்டைப் பண்ணைகள் அமைக்கப்பட்டன.
அந்நியச் செலாவணியை ஈட்டும் நோக்கில் இவை ஊக்குவிக்கப்பட்டாலும், தற்போது இது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் காரணியாக மாறியுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மீன் வரத்து குறைவு காரணமாக யாழ்ப்பாணச் சந்தைகளில் மீன்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
யாழ். குருநகர் சந்தையில் பாரை மீன், நண்டு மற்றும் இறால் ஆகியவற்றின் விலை ஒரு கிலோ 2,500 முதல் 3,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொருளாதார நெருக்கடி மற்றும் எல்லை தாண்டிய அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், வடபகுதி கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடற்றொழிலாளர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.