;
Athirady Tamil News

4000 கி.மீ.-க்கு அப்பால்… அமெரிக்க – பிரிட்டன் ராணுவ தளங்களைக் குறிவைத்து தாக்கிய ஈரான்!

0

அமெரிக்க – பிரிட்டன் ராணுவ தளங்களைக் குறிவைத்து இரு ஏவுகணைகள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்தியப் பெருங்கடலில் டியாகோ கார்சியா என்கிற தீவு அமைந்துள்ளது. பிரிட்டன் வசம் உள்ள இந்தத் தீவில் ஈரானுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு அமெரிக்க ராணுவப் படையை நிலைநிறுத்த பிரிட்டன் அனுமதித்தது.

இங்குள்ள அமெரிக்க – பிரிட்டன் ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் இரு பாலிஸ்டிக் ஏவுகணைகளை செலுத்தியதாக நேற்று முன்தினம் (மார்ச் 20) செய்திகள் வெளியாகின.

ஈரான் எல்லையில் இருந்து கிட்டத்தட்ட 4000 கி.மீ.-க்கு அப்பால் உள்ள தீவில் தாக்குதல் நடத்த முயற்சி செய்த நிலையில் இரு ஏவுகணைகளும் இலக்கைத் தாக்கவில்லை. ஆனால், இவ்வளவு அதிக தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள் ஈரானிடம் இருப்பது இந்தச் சோதனை மூலம் தெரிய வந்துள்ளது.

ஒரு ஏவுகணை ஏவிய பின்னர் செயலிழந்த நிலையில், மற்றொரு ஏவுகணை அமெரிக்கப் போர்கப்பலில் இருந்து செலுத்தப்பட்ட இடைமறித்து தாக்கும் ஏவுகணையால் தாக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியானது.

ஆனால், அமெரிக்க அரசு இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை.

ஆசியா சார்ந்த நடவடிக்கைகளுக்கு ஒரு முக்கியத் தளமாக இந்தத் தீவைப் பயன்படுத்தி வரும் அமெரிக்கா அங்கு குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்தும் விமானங்கள் மற்றும் பல போர் உபகரணங்களை நிலைநிறுத்தியுள்ளது.

1960-களில் இருந்து தனது வசம் வைத்திருந்த சாகோஸ் தீவுகளை பிரிட்டன் அரசு மொரீஷியசுக்கு திருப்பி அளிக்க ஒப்புக்கொண்டது. மேலும், இந்தத் தீவுகளில் மிகப்பெரியதான டியாகோ கார்சியாவை ஒப்பந்த முறையில் தற்போது பிரிட்டன் பயன்படுத்துகின்றது. இந்த முடிவுக்கு டிரம்ப் எதிர்ப்புத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.