;
Athirady Tamil News

மீண்டும் எண்ணெய் விலையில் மாற்றமா? சவுதி எண்ணெய் நிலையங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்

0

சவுதி அரேபியாவின் முக்கிய எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் மற்றும் விநியோகக் குழாய்களை இலக்கு வைத்து அண்மைய காலத்தில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களால், அந்த நாட்டின் மசகு எண்ணெய் உற்பத்தித் திறன் நாளாந்தம் சுமார் 600,000 பீப்பாய்களினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

அத்துடன், உலகச் சந்தைக்கு எண்ணெய் விநியோகிக்கும் பிரதான பாதையான கிழக்கு – மேற்கு குழாய் வழியிலான விநியோகம் சுமார் 700,000 பீப்பாய்களால் குறைவடைந்துள்ளதாக சவுதி எரிசக்தி அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தத் தாக்குதல்களில் சவுதி எரிசக்தி நிறுவனத்தைச் சேர்ந்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஏழு ஊழியர்கள் காயமடைந்துள்ளனர்.

ரியாத், கிழக்கு மாகாணம் மற்றும் யான்பு (Yanbu) கைத்தொழில் நகரம் ஆகிய பகுதிகளில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பெட்ரோகெமிக்கல் தளங்கள் இந்தத் தாக்குதல்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, ‘மனிஃபா’ (Manifa) எண்ணெய் வயல் மற்றும் ‘குரைஸ்’ (Khurais) நிலையங்கள் மீதான தாக்குதல்களால் உற்பத்தித் திறன் பெருமளவு குறைந்துள்ளது.

மேலும், SATORP, ராஸ் தனுரா (Ras Tanura) மற்றும் SAMREF உள்ளிட்ட பிரதான சுத்திகரிப்பு நிலையங்கள் பாதிக்கப்பட்டதால், சர்வதேச சந்தைக்கான சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் தயாரிப்புகளின் ஏற்றுமதி நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியான இந்த தாக்குதல்கள் உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதோடு, எண்ணெய் விலையில் பாரிய ஏற்ற இறக்கங்களை உருவாக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.