;
Athirady Tamil News

பிக்குவின் பொலிஸ் முறைப்பாட்டால் தையிட்டி விகாரை காணி அளவீடு நிறுத்தம் ; ஒரு மாதத்திற்குள் மீண்டும் முயற்சி?

0
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்யும் பணிகள் விகாரதிபதியின் பொலிஸ் முறைப்பட்டினை அடுத்து கைவிடப்பட்டுள்ளது. 
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியின் உரிமையாளர்களில் 17 பேரின் காணிகளை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அளவீடு செய்வது எனவும் , அதற்கு காணி உரிமையாளர்கள் சம்மதிக்க வேண்டும் என கடந்த 11ஆம் திகதி கடற்தொழில் அமைச்சர் இ.சந்திரசேகரர் மற்றும் மாவட்ட செயலர் ம. பிரதீபன் ஆகியோர் காணி உரிமையாளர்களிடம் கோரி இருந்தனர்.
அதன் அடிப்படையில் இன்றைய தினம் காணி அளவீட்டு பணிகளை முன்னெடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் தையிட்டி விகாரை விகாராதிபதி ஜின்தோட்டை நந்தாராம தேரர் , விகாரை காணியினை சட்டவிரோதமாக அளவீடு செய்ய முயல்வதாக பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
அந்நிலையில் முன்னர் அறிவிக்கப்பட்டமைக்கு அமைவாக , காணி உரிமையாளர்கள் , மற்றும் நிலஅளவை திணைக்கள உத்தியோகஸ்தர்கள் விகாரை பகுதிக்கு காலை 09 மணிக்கு வருகை தந்திருந்தனர்.
இருந்த போதிலும் , காணிகளை அடையாளம் காட்ட வருமாறு காணி உரிமையாளர்களுக்கு அழைப்பு விடுத்த கடற்தொழில் அமைச்சர் , மாவட்ட செயலர் , தெல்லிப்பளை பிரதேச செயலர் உள்ளிட்ட எவரும் அவ்விடத்திற்கு காலை 9.30 மணி வரையில் வருகை தராத நிலையில் , விகாரை பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டு இருந்தமையால் , காணி உரிமையாளர்கள் மத்தியில் குழப்பமான நிலைமை ஏற்பட்டு இருந்தது.
அந்நிலையில் காலை 10 மணியளவில் அவ்விடத்திற்கு வருகை தந்த மாவட்ட செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் , காணி அளவீடு செய்வதற்கு கொழும்பில் இருந்து விசேட குழு வருகை தர வேண்டும் எனவும் , அதனால் ஒரு மாத கால பகுதிக்குள் காணி அளவீட்டு பணிகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுப்பதாக காணி உரிமையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
தமக்கு குறுகிய கால அழைப்பில் ஒரு சனிக்கிழமை எம்மை அழைத்து காணி அளவீட்டு பணிகள் இன்றைய தினம் நடைபெறும் என கூறியவர்கள் , இன்று மீண்டும் ஒரு மாதத்திற்குள் அளவீடு செய்ய நடவடிக்கை என கூறுகிறார்கள்.
கடந்த பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற கூட்டத்தில் காணி அளவீடு செய்வது என பேசப்பட்டுள்ளது.அந்த கூட்டத்தில் பிக்குவும் கலந்து கொண்டிருந்தார். எம்மை அந்த கூட்டத்திற்கு அழைக்கவில்லை. இதுவரையில் கொழும்பில் நடைபெற்ற மூன்று கூட்டத்திற்கும் எம்மை அழைக்கவில்லை. அந்த கூட்டத்தில் என்ன பேசப்பட்டது , என்ன தீர்மானிக்கப்பட்டது என்பது தொடர்பில் எமக்கு எவரும் கூறவில்லை. அந்த கூட்ட அறிக்கைகள் கூட எமக்கு தரப்படவில்லை.
அவ்வாறான நிலையில் பிக்கு தனக்கு காணி அளவீடு செய்வது தொடர்பில் அறிவிக்கவில்லை என இன்று கூறி அளவீட்டு பணிகளை தடுத்து நிறுத்தியுள்ளார்.
ஆனால் மாவட்ட செயலர் , கொழும்பில் இருந்து விசேட குழு வர வேண்டும். அதன் பின்னரே காணிகளை அளவீடு செய்ய முடியும் என கூறி சென்றுள்ளார்.
இதுவரையில் காணி உரிமையாளர்கள் தான் விகாரை பிரச்சனையை தீர்க்க விரும்பவில்லை என கருத்து கூறி வந்தார்கள். நாம் இன்று காணிகளை அளவீடு செய்ய சம்மத்தித்த போதிலும் பிக்குவின் தலையீட்டால் காணி அளவீட்டு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. யார் பிரச்சனைக்குரியவர்கள் என தற்போது எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.
காணி அளவீட்டுக்கு இன்று எம்மை வருமாறு கூறி விட்டு கடற்தொழில் அமைச்சரோ , அவரின் பிரதிநிதிகளோ , தேசிய மக்கள் சக்தியினரோ யாரும் விகாரை பகுதிக்கு வரவில்லை என காணி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
You might also like

Leave A Reply

Your email address will not be published.