பிரித்தானியாவில் இலங்கை மாணவியின் பட்டம் பெறும் கனவு சிதைந்தது ; மாணவியின் வேதனை குரல்
பிரித்தானியாவின் கொவென்ட்ரி பல்கலைக்கழகத்தில் (Coventry University) கல்வி பயின்று வந்த இலங்கை மாணவி ஒருவருக்கு, கல்விக்கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்ட ஒரு நாள் தாமதம் காரணமாக அவரது கல்வி பாதிக்கப்பட்டதுடன், நாடு கடத்தப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த 25 வயதுடைய நவோத்யா டி சில்வா என்ற மாணவியே இந்த நிலைக்கு முகங்கொடுத்துள்ளதாக The Guardian செய்தி வெளியிட்டுள்ளது.
International Hospitality and Tourism Management துறையில் பட்டம் பெறுவதற்காக லண்டனுக்கு சென்றிருந்த இவரின் கல்விக்காக, அவரது தந்தை தனது வாழ்நாள் சேமிப்பை முழுமையாக செலவிட்டுள்ளார்.
மூன்று ஆண்டுகள் கொண்ட இந்தப் படிப்பிற்கான கட்டணம் 42,000 ஸ்டெர்லிங் பவுண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இரண்டாம் ஆண்டுக்கான முதற்கட்டமாக 8,000 பவுண்டுகளை செலுத்துவதற்கான இறுதி திகதி 2025 ஒக்டோபர் 6 ஆக இருந்தது.
எனினும், நவோத்யா ஒக்டோபர் 3ஆம் திகதியே பணத்தை அனுப்பியிருந்த போதிலும், வங்கி நடைமுறைகளால் அது பல்கலைக்கழக கணக்கில் ஒக்டோபர் 7ஆம் திகதியே சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த ஒரு நாள் தாமதத்தை காரணம் காட்டி, பல்கலைக்கழகம் மாணவியை கற்கைநெறியிலிருந்து நீக்கியதுடன், அது குறித்து UK Home Officeக்கு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த மாணவி, “காலக்கெடுவுக்கு முன்னரே பணத்தை அனுப்பிவிட்டேன். வங்கி தாமதம் என் கட்டுப்பாட்டில் இல்லை. வகுப்புகளுக்கு முறையாகச் சென்று நல்ல பெறுபேறுகள் பெற்ற என்னைத் தண்டிப்பது அநீதி” எனக் கவலையுடன் தெரிவித்துள்ளார்.
மற்றபுறம், பல்கலைக்கழகப் பேச்சாளர், மாணவர்களுக்கு கட்டணம் செலுத்த ஆறு வார அவகாசம் வழங்கப்படுவதாகவும், வீசா விதிமுறைகளை பின்பற்றுவது தங்களது கடமை என்றும் கூறியுள்ளார்.
UK Home Office தெரிவித்ததாவது, இது பல்கலைக்கழகத்துக்கும் மாணவிக்கும் இடையிலான விவகாரம் என்றும், பல்கலைக்கழகம் பதிவு ரத்து செய்தால் மட்டுமே வீசா ரத்து செய்யப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
தற்போது, குறித்த மாணவி பிரித்தானியாவில் தங்குவதற்கான மேலதிக அனுமதிக்காக விண்ணப்பித்துள்ளார். அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், அவர் உடனடியாக இலங்கைக்கு அனுப்பப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது.
ஒரு தொழில்நுட்ப தாமதத்தால் மாணவியின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ள இந்த சம்பவம், புலம்பெயர் சமூகத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.