;
Athirady Tamil News

நெடுந்தீவுக்கான நிரந்தர குடிநீர் விநியோகத்திட்டம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

0

நெடுந்தீவுக்கான நிரந்தர குடிநீர் விநியோகத்திட்டம் 2027ஆம் ஆண்டில் முழுமைபெறும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

நெடுந்தீவில் 2015 ஜூனில் சுமார் 105 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட கடல்நீர் சுத்திகரிப்பு (SWRO) நிலையம் தற்போது ஓரளவு செயல்பாட்டில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த ஒரு வாரத்திற்குள் முழுமையான செயல்பாட்டுத் திறனை எட்டும் என்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் வடக்கு மாகாண உதவிப் பொது முகாமையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அவர்கள் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் மேலும், “இந்நிலையம் வடிவமைக்கப்பட்ட நாளாந்த கொள்ளளவை அடையாமல், தற்போது சுமார் 60 கன மீட்டர் (m³/day) அளவிலேயே உற்பத்தி செய்து வருகிறது.

இலக்கு நிர்ணயிப்பு
கடந்த ஆண்டு இறுதியில் ஏற்பட்ட தொழில்நுட்பச் சிக்கல்களைத் தொடர்ந்து, அவசரகாலப் பழுதுபார்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அடிப்படைச் செயல்பாடுகள் மீட்டெடுக்கப்பட்டு தற்போது நிலைப்படுத்தும் நடவடிக்கைகள் நிறைவடைந்து வரும் நிலையில், விரைவில் நிலையம் முழுத் திறனுடன் இயங்கும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை உறுதிப்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், நெடுந்தீவின் நீண்டகால குடிநீர் தேவைக்கான நிரந்தரத் தீர்வாக, 300 கன மீட்டர்/நாள் கொள்ளளவு கொண்ட புதிய கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்கான விரிவாக்கத் திட்டத்தை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) நிதியுதவியுடன் தொடங்கியுள்ளது.

திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து வடக்கு உதவிப் பொது முகாமையாளர் அலுவலகம் குறிப்பிடுகையில் “விரிவான தொழில்நுட்ப விவரக்குறிப்புகள், சாத்தியக்கூறு ஆய்வுகள், சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பாதிப்பு மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இத்திட்டம் நெடுந்தீவின் முழுக் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்யும் வகையில் அமையும். 2027ஆம் ஆண்டின் இறுதிக்குள் புதிய நிலையத்தை முழுமையாகச் செயல்பாட்டுக்குக் கொண்டுவர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது”

இந்த முன்னெடுப்பு, தற்காலிகப் பழுதுபார்ப்புகளில் இருந்து மாறி, நெடுந்தீவில் நிலையான மற்றும் நீண்டகால நீர் முகாமைத்துவ முறையை நோக்கிய முக்கியமான மாற்றமாக அமையும் என” நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் வடக்கு மாகாண உதவி பொது முகாமையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.