;
Athirady Tamil News

அல்லைப்பிட்டியில் சிறுவன் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சம்பவம் – சந்தேகநபர்களை கைது செய்ய உத்தரவு

0

அல்லைப்பிட்டியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் சிறுவன் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் , பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நம்பிக்கை தரும் வகையில் விசாரணைகளை முன்னெடுத்து , சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை கைது செய்து , நீதிமன்றில் முற்படுத்துமாறு , ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் அனீபா ரஜீவ் மத்திய குற்ற புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிட்டுளளார்.

அல்லைப்பிட்டி பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் கட்டளையை மீறி ஹயஸ் ரக வாகனத்தை செலுத்தினார் என பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் , 17 வயது சிறுவனான அருள் பயஸ் உயிரிழந்திருந்தார்.

குறித்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நேற்றைய தினம் புதன்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன் போது , கடந்த வழக்கு தவணையில் ,குறித்த சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் நலன் சார்ந்து மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் விண்ணப்பம் செய்ததை , அடுத்து நீதிமன்று , விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு மாற்றுமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் , குற்றப்புலனாய்வு பிரிவினர் பல வழக்குகள் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுப்பதனால் ,கடும் வேலை பளு காரணமாக வழக்கு விசாரணைகளை மத்திய குற்றப்புலனாய்வு பணியகத்திற்கு பரப்படுத்துவதாக கடந்த 07ஆம் திகதி திகதியிடப்பட்ட கடிதம் ஊடாக மன்றுக்கு பொலிஸ் மா அதிபர் அறிவித்திருந்தார்.

அதனை தொடர்ந்து மத்திய குற்றப் புலனாய்வு பணியகம் வழக்கினை பாரமெடுத்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் நேற்றைய வழக்கு விசாரணையின் போது, மத்திய குற்றப்புலனாய்வு பணியக அதிகாரிகள் மன்றில் முன்னிலையாகி , ஊர்காவற்துறை பொலிசாரின் குறிபேடுகள் , விசாரணை அறிக்கைகள் , சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் என்பவற்றை தாம் பாரம் எடுத்துள்ளதாகவும் , நீதிச்சேவை ஆணைக்குழுவின் சுற்றிக்கைக்கு அமைவாக துப்பாக்கிகளை , யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலையத்தில் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் , தாம் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக மன்றில் தெரிவித்தனர்.

அதனை அடுத்து, பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நம்பிக்கை தரும் வகையில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்திய மன்று , சந்தேகநபர்களை விரைவாக கைது செய்து மன்றில் முற்படுத்துமாறு உத்தரவிட்டது.

அத்துடன் வழக்கினை எதிர்வரும் மே மாதம் 22ஆம் திகதிக்கு மன்று திகதியிட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.