;
Athirady Tamil News

குழந்தைகளுக்கு எடை குறைப்பு மருந்து, அறுவை சிகிச்சை வேண்டாம்: உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தல்

0

9 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் உடல் பருமனை குறைக்க எடை குறைப்பு மருந்துகளையோ அல்லது அறுவை சிகிச்சையையோ நாட வேண்டாம் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

தீவிரமாகும் உடல் பருமன் ஆபத்து

ஒரு குழந்தையின் வயது மற்றும் உயரத்திற்கு ஏற்ற ஆரோக்கியமான எடையைவிட, கூடுதல் எடை இருப்பது ‘ஒபிசிட்டி’ எனப்படும் தீவிர உடல்நல பாதிப்பாக கருதப்படுகிறது. சமீபகாலமாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த உடல் பருமன் பிரச்சனையால் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

காரணம் என்ன?

குழந்தைகளின் இந்த திடீர் எடை அதிகரிப்புக்கு முக்கிய காரணங்களாக கூறப்படுபவை:

• அதிக சர்க்கரை சேர்க்கப்பட்ட குளிர்பானங்கள்

• துரித உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள்

• அதிகப்படியான கலோரிகள் கொண்ட உணவு முறை

• போதிய உடற்பயிற்சி இல்லாமை

விளையாடும் வயதில் குழந்தைகள் மைதானத்திற்கு சென்று விளையாடுவதை குறைத்து கொண்டு, எப்போதும் செல்போன் பார்க்கும் பழக்கம் அதிகரித்ததே இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணமாக உருவெடுத்துள்ளது.

மாற்று வழி என்ன?

இதற்காக பெற்றோர் பலர் மருத்துவர்களையும், மருந்துகளையும் நாடி ஓடுகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக உலக சுகாதார நிறுவனம் சில முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது:-

• 9 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எந்தவொரு எடை குறைப்பு மருந்துகளோ, அறுவை சிகிச்சையோ முற்றிலும் செய்யக்கூடாது.

• அதற்கு பதிலாக, குழந்தைகளின் உணவு முறை மற்றும் உடற்பயிற்சி போன்ற வாழ்க்கைமுறை பழக்கங்களை மாற்றுவதற்கே பெற்றோர் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

• 10 முதல் 19 வயது வரை உள்ள டீன்-ஏஜ் பருவத்தினருக்கு, கடுமையான உடல் பருமனுடன் சேர்த்து சர்க்கரை நோய், இன்சுலின் எதிர்ப்பு அல்லது கட்டுப்படுத்த முடியாத உயர் ரத்த அழுத்தம் போன்ற தீவிர பாதிப்புகள் இருந்தால் மட்டுமே மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருந்து அல்லது அறுவை சிகிச்சையை தேர்ந்தெடுக்கலாம்.

ஆரோக்கியமான வாழ்வியல் முறை

உயரத்திற்கு ஏற்ற உடல் எடையை பராமரிப்பதன் மூலம் மட்டுமே உடல் பருமன், சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளில் இருந்து தப்பிக்க முடியும் என்பதால், குழந்தைகளுக்கு ஆரோக்கியமான வாழ்வியல் முறையை கற்றுக்கொடுப்பதே சிறந்தது என்று சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.