;
Athirady Tamil News

தமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

0

சென்னை,

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் (ஏப்ரல் 23) நிறைவடைந்த நிலையில், 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 வாக்கு எண்ணும் மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் அடுத்த ஆட்சியை அமைக்கப் போவது யார்? மக்கள் தீர்ப்பு யாருக்கு? என்ற பெரும் எதிர்பார்ப்பில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தி.மு.க. மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்து வரலாறு படைக்குமா? அதிமுக-பாஜக கூட்டணி மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றுமா? தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆட்சியைப் பிடிப்பாரா? அல்லது எதிர்க்கட்சித் தலைவராக சட்டமன்றத்திற்குள் நுழைவாரா? என்ற கேள்விகளுக்கு இன்று தெளிவான பதில்கள் கிடைக்கவுள்ளன.

காலை 6 மணி முதலே வாக்கு எண்ணும் பணியாளர்கள், தேர்தல் அதிகாரிகள் மற்றும் வேட்பாளர் முகவர்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவர். அவர்களின் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கைக்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு, காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

காலை 11 மணி முதல் முன்னிலை நிலவரங்கள் தெளிவாக தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ முடிவுகள் மாலை முதல் நள்ளிரவு வரை கட்டத்துக்கட்டமாக வெளியாகலாம் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையின் அதிகாரப்பூர்வ முடிவுகளும் தேர்தல் நடத்தும் அதிகாரியால் வெளியிடப்படும். வாக்கு எண்ணும் பணிகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு தேர்தல் பார்வையாளர், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கண்காணிப்பில் பணிகள் நடைபெறுகின்றன.

பாதுகாப்பு ஏற்பாடாக 70 கம்பெனி துணை ராணுவப்படையினர் உட்பட 18 ஆயிரம் போலீசார் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், அசம்பாவிதங்களைத் தடுக்க தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். 5.73 கோடி வாக்காளர்களில் 4.88 கோடி பேர் வாக்களித்துள்ளனர். இதன் மூலம் 85.10 சதவீத வாக்குப்பதிவு பதிவாகி புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி எடப்பாடி தொகுதியிலும் மீண்டும் போட்டியிட்டுள்ளனர். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதிகளில் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி தொகுதியில் களமிறங்கியுள்ளார்.

தமிழகத்தின் அடுத்த அரசை தீர்மானிக்கும் முக்கிய நாள் இன்று என்பதால் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.