;
Athirady Tamil News

போர்க்கப்பல் மீது தாக்குதல் நடத்தியதா ஈரான்? அமெரிக்கா மறுப்பு

0

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் தனது கட்டுப்பாட்டில் இருந்த ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது. இதனால் ஏராளமான சரக்கு கப்பல்கள் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன. கப்பல் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டுள்ளதால், பல்வேறு நாடுகளுக்கான கச்சா எண்ணெய், சமையல் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் ஈரானின் துறைமுகங்களை மற்றும் கடற்பகுதியை அமெரிக்கா முற்றுகையிட்டுள்ளது. இதனால் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் திறக்காமல் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது. ஈரானை வழிக்கு கொண்டு வந்து ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக சரக்கு கப்பல்களை கொண்டு செல்வதற்காக பல்வேறு ராஜதந்திர மற்றும் கொள்கைரீதியான வழிமுறைகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் பரிசீலித்து வருகிறார்.

இந்நிலையில், அமெரிக்காவின் போர்க்கப்பலை ஈரான் தாக்கியதாக தகவல் வெளியானது. ஹார்முஸ் ஜலசந்திக்கு தென்கிழக்கே, கடல்சார் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதால் அமெரிக்க கடற்படைக் கப்பல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும், இதையடுத்து அந்தக் கப்பல் வந்த வழியே பின்வாங்கி சென்றதாகவும் ஈரானிய செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டன. இதனால் மீண்டும் அப்பகுதியில் பதற்றம் உருவானது.

ஆனால் இந்த தகவலை அமெரிக்க ராணுவம் மறுத்துள்ளது. பாரசீக வளைகுடாவிற்கு அருகிலுள்ள பகுதியில் அமெரிக்கா தொடர்ந்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்வதை வழிநடத்தவும், ஈரானின் அனுமதியை பெறாத கப்பல்கள் மீது அந்த நாடு விதித்துள்ள முற்றுகையை அகற்றவும் அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், அமெரிக்க ராணுவத்தின் இந்த தகவல் வெளியாகியிருக்கிறது.

இது ஒருபுறமிருக்க தெற்கு லெபனான் முழுவதும் போர்நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக லெபனானின் தேசிய செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. குனைன் மற்றும் பராச்சித் நகரங்கள் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதாகவும், குனைன் மீது பீரங்கி தாக்குதல் நடத்தியதாகவும் அந்த செய்தியில் கூறி உள்ளது.

துலைன், கஃபார் தெப்னிட், ஸவ்தார் அல்-கர்பியா ஆகிய நகரங்களையும், டெய்ர் சிரியான்-ஸவ்தாரின் புறநகர்ப் பகுதிகளை இஸ்ரேல் படைகள் குறிவைத்ததாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.