காலிஸ்தான் பயங்கரவாதிகள் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: கனடா அரசு அறிவிப்பு
ஒட்டாவா : கனடாவில் செயல்படும் காலிஸ்தான் பயங்கரவாத குழுக்கள் ‘தேசப் பாதுகாப்பு அச்சுறுத்தல்’ என அந்நாட்டு உளவு அமைப்பு தெரிவித்துள்ளது.
‘கனடாவை தளமாகக் கொண்டு செயல்படும் சில காலிஸ்தான் பயங்கரவாதிகள் வன்முறை கருத்துகளை பரப்புவதோடு மட்டுமல்லாமல், பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டியும் வருகின்றனா். இது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது’ என்று அந்நாட்டு அமைப்பு வெளியிட்ட 2025-ஆம் ஆண்டுக்கான பொது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், காலிஸ்தான் எனப்படும் தனி மாநில உருவாக்கத்திற்கான அமைதியான மற்றும் வன்முறை இல்லாத அரசியல் கோரிக்கைகள் பயங்கரவாதமாக கருதப்படமாட்டாது என்றும், சில கனடியா்கள் அமைதியான முறையில் இந்த பிரிவினையை ஆதரிக்கும் இயக்கங்களில் பங்கேற்கிறாா்கள் என்றும் அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டது.
கனடாவின் வரலாற்றில் மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதலாக கருதப்படும், ஏா் இந்திய விமான குண்டுவெடிப்பு சம்பவத்தின் 40-ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த சம்பவத்தில் 329 போ் உயிரிழந்தனா். இதில் பெரும்பாலானவா்கள் கனடாவின் குடிமக்கள்.
2023-ஆம் ஆண்டில் கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளா் ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கொல்லப்பட்டதில் இந்தியாவின் தொடா்பு இருப்பதாக அந்நாட்டின் அப்போதைய பிரதமா் ஜஷ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டினாா். இது இரு நாடுகள் இடையிலான உறவில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. பின்னா் ஜஷ்டின் ட்ரூடோவை தோற்கடித்து அந்நாட்டின் பிரதமராக மாா்க் காா்னி பதவியேற்றதையடுத்து, இருநாடுகளும் தங்களது உறவுகளை வலுப்படுத்தி வருகின்றன.