யாழ்ப்பாணத்தை விஜய்க்கு எழுதிக் கொடுங்கள்! அநுர அரசாங்கத்திடம் கேட்ட அர்ச்சுனா எம்.பி
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கேட்டது போல கச்சத்தீவை மட்டுமல்ல யாழ்ப்பாணத்தையும் சேர்த்து தமிழ்நாட்டிடம் இந்த அரசாங்கம் கொடுக்க வேண்டும் என்று யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றியீட்டியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு சபையில் வைத்து, அர்ச்சுனா எம்.பி வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் இனி தமிழகத்திற்கா..
மேலும் அவர் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களின் இதயத்தை கவர்ந்த, தமிழ் நாட்டின் புதிய முதலமைச்சர் விஜய்க்கு, ஒரு அடக்கப்பட்ட தமிழன் என்ற வகையில் எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
வடக்கில், உள்ள தீவுப்பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படுவதில்லை என்பது மிக முக்கிய குற்றச்சாட்டாக உள்ளது. குறிப்பாக நெடுந்தீவு பகுதியில் உள்ள குடும்பங்களில் பாதிக்கு பாதி மக்களுக்கு மின்சாரம் இல்லை. ஒரு வாரத்தில் கிட்டத்தட்ட 5 நாட்களில் மின்சாரம் தடைப்படுகின்றது. தீவுப் பகுதிகளில் இது பாரிய பிரச்சினையாக உள்ளது.
கச்சத்தீவை, விஜய் கேட்டார் என்ற போது அதனை தர முடியாது என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்திருந்தார். ஆனால், நாங்கள் கூறுகின்றோம் கச்சத்தீவை மாத்திரம் அல்ல, முழு யாழ்ப்பாணத்தையும் தமிழகத்திற்கு எழுதிக் கொடுங்கள். தமிழ் நாட்டு மக்கள் எங்களைப் பார்த்துக் கொள்வார்கள் என குறிப்பிட்டுள்ளார்.