பொலிஸ் உத்தியோகத்தரின் உறவினரான ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இளைஞனிடம் விசாரணை
பொலிஸ் உத்தியோகத்தரின் உறவினரான ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இளைஞனிடம் கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரிய ஜும்மா பள்ளிவாசல் அருகில் இன்று (8) மதியம் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பின் போது குறித்த இளைஞன் சந்தேகத்தின் அடிப்படையில் கைதானார்.
28 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரான இளைஞனிடம் இருந்து 25 கிராம் 280 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த சந்தேக நபர் பொலிஸ் உத்தியோகத்தரின் உறவினர் என்பதுடன் அண்மைக்காலமாக அப்பகுதி இளைஞர்களுக்கு போதைப்பொருட்களை இரகசியமாக விநியோகித்து வருபவர் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த சுற்றி வளைப்பானது மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.ஏ.எல்.லசந்த களுஆராச்சி வழிகாட்டலில் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இவ்விடயம் குறித்து சட்ட நடவடிக்கைகளை கல்முனை தலைமையக பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
மேலும் இச்சோதனை நடவடிக்கையானது கிழக்குப் பிராந்தியத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் உத்தரவின் பேரில் அம்பாறை பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் பணிப்புரைககமைய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரியாராச்சி நெறிப்படுத்தலில் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸாரின் வழிகாட்டுதலின் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த களுவாராய்ச்சி தலைமையிலான உப பொலிஸ் பரிசோதகர் அனுரகுமார பொலிஸ் உத்தியோகத்தர்களான ஜவாத்(71380) இஸ்மத்(88503) மனோஜ்(87274) உள்ளிட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்தார்
