யோஷித ராஜபக்ஷ மீது வழக்கு விசாரணை ஆரம்பம் ; நீதிமன்றத்தில் முக்கிய தீர்ப்பு
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட வழக்கில், பிரதிவாதி தரப்பால் முன்வைக்கப்பட்ட ஆரம்பக்கட்ட ஆட்சேபனையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (14) நிராகரித்துள்ளது.
வழக்கு விசாரணை
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.
வழக்கை முன்னெடுக்க முடியாது எனவும், குறிப்பாக ‘சதித் திட்டம்’ என்ற குற்றச்சாட்டை தொடர முடியாது எனவும் பிரதிவாதி தரப்பு முன்வைத்த ஆட்சேபனை அடிப்படையற்றது என நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, குறித்த ஆட்சேபனையை நிராகரிப்பதாக அறிவித்த நீதிபதி, வழக்கை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு எந்தத் தடையும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
பின்னர், பிரதிவாதியான யோஷித ராஜபக்ஷவுக்கு பகிரங்க நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டது.
அதன்போது, தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு தாம் குற்றவாளி அல்ல என அவர் நீதிமன்றத்தில் தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, குறித்த வழக்கு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.