;
Athirady Tamil News

மாணவியை காப்பாற்றசென்று உயிரிழந்த ஆசிரியர்; துயரத்தில் முடிந்த கல்விச் சுற்றுலா

0

மொனராகலை கல்வி வலயத்திற்குட்பட்ட படல்கும்பூர, வைகும்பூர தமிழ் கனிஷ்ட வித்தியாலயத்தின் கணித ஆசிரியர் ஒருவர், கல்விச் சுற்றுலா சென்றிருந்த இடத்தில் கடலில் நீராடிக்கொண்டிருந்த மாணவி ஒருவரைக் காப்பாற்ற முயன்றபோது உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று , திங்கட்கிழமை (25) இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் படல்கும்பூர, அலுபொத்த, பிலிமல பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான என்.எம்.எம். நுஜூம் (56 வயது) என்ற கணித ஆசிரியரே உயிரிழந்துள்ளார்.

கல்விச் சுற்றுலா…
குறித்த பாடசாலையின் அதிபர் மற்றும் சில ஆசிரியர்கள், மாணவ மாணவிகளுடன் கல்விச் சுற்றுலாவில் ஈடுபட்டிருந்தபோது, மாலை 4.30 மணியளவில் கிரிந்த (Kirinda) கடற்கரைக்குச் சென்று கடலில் நீராடியுள்ளனர்.

அதன்போது, ஒரு மாணவி கடல் அலையினுள் சிக்கி நீரில் மூழ்கிக் கொண்டிருப்பதைக் கண்ட ஆசிரியர், மாணவியை காப்பாற்றச் சென்ற தருணத்தில் இருவருமே நீரில் மூழ்கியுள்ளனர்.

தொடர்ந்து, உயிர்காக்கும் பிரிவினரும் (Life Guards) பிரதேசவாசிகளும் இணைந்து அவர்கள் இருவரையும் மீட்டு, தெபரவெவ ஆதார வைத்தியசாலையில் அனுமதித்ததன் பின்னர் சிகிச்சை பலனின்றி ஆசிரியர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து கிரிந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், ஆசிரியரின் மரணம் பாடசாலை சமூகத்தை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.