பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை ; சிசிடிவியில் சிக்கிய நபர்
சென்னை மயிலாப்பூர் சாந்தோம் பேருந்து நிறுத்தத்தில் கல்லூரி மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை வழங்கியதாகக் கூறப்படும் நபர் ஒருவரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
19 வயதுடைய கல்லூரி மாணவி ஒருவர் தனது தோழியுடன் பேருந்து நிறுத்தத்தில் உரையாடிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த நபர் ஒருவர் அவரிடம் ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி கூச்சலிட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் பொதுமக்கள் திரண்டுள்ளனர்.
இதையடுத்து குறித்த நபர் மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், மயிலாப்பூர் பொலிஸார் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலும், சம்பவம் இடம்பெற்ற பகுதியிலுள்ள கண்காணிப்பு கெமரா காட்சிகளை ஆய்வு செய்த பொலிஸார், மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட நபர் பட்டினம்பாக்கம் ஆர்.ஏ.புரம் பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய மதன் என்பதைக் கண்டறிந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மயிலாப்பூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.