;
Athirady Tamil News

பெற்றோரைக் கைவிடும் பிள்ளைகளுக்கு எதிராக புதிய சட்டம்

0

பெற்றோரின் சொத்துக்களை அனுபவித்துக் கொண்டு அவர்களைக் கைவிட்டுச் செல்லும் பிள்ளைகளிடமிருந்து அந்தச் சொத்துக்களை மீளப் பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய ஒழுங்குவிதிகள் மற்றும் சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இது தொடர்பான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ சூரியன் தெரிவித்துள்ளார். பெற்றோரால் கைவிடப்பட்ட முதியோர்களை அரசாங்கம் பொறுப்பேற்று பராமரிக்கும் நடவடிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பெற்றோரின் சொத்துக்களைப் பெற்றுக்கொண்ட பின்னர் அவர்களைப் பராமரிக்கத் தவறும் அல்லது கைவிடும் பிள்ளைகளிடமிருந்து அந்தச் சொத்துக்களை அரசுடைமையாக்கும் வகையில் சட்டங்களை உருவாக்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பெற்றோரின் சொத்துக்களைப் பெற்றுக்கொண்டு அவர்களைக் கைவிடுவது மிகக் கொடூரமான செயலாகும் என்றும், அது பெற்றோர்களின் அடிப்படை உரிமைகளை மீறும் நடவடிக்கையாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனைக் கருத்தில் கொண்டு, கைவிடப்படும் பெற்றோர்களின் நலனைப் பாதுகாக்கவும், அவர்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் தொடர்பில் உரிய பாதுகாப்பை வழங்கவும் புதிய சட்ட மற்றும் நிர்வாக ஏற்பாடுகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, பிள்ளைகளால் பராமரிக்கப்படாமல் அல்லது பல்வேறு தொந்தரவுகளுக்கு உள்ளாகும் பெற்றோர்கள் தங்களது பிரச்சினைகளை உடனடியாக அதிகாரிகளுக்கு அறிவிப்பதற்கான விசேட ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ சூரியன் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.