;
Athirady Tamil News

தென் ஆப்பிரிக்காவில் பயங்கரம்; மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு: 12 பேர் உயிரிழப்பு

0

ஜோகன்னஸ்பர்க்,

தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள கிளீவ்லேண்ட் என்ற பகுதியில் நடைபெற்ற பயங்கர துப்பாக்கி சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் காயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.நேற்று இரவு உள்ளூர் நேரப்படி சுமார் 11.10 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வெள்ளை நிற டொயோட்டா வாகனத்தில் வந்த 10-க்கும் மேற்பட்ட நபர்கள் குடியிருப்புப் பகுதிக்குள் இரு நுழைவாயில்கள் வழியாக நுழைந்துள்ளனர். தொடர்ந்து, அப்பகுதி மக்களை குறிவைத்து பல இடங்களில் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர். தாக்குதலுக்குப் பிறகு மர்மநபர்கள் அதே வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் 8 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த ஒருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. துப்பாக்கி சூட்டில் காயமடைந்த 9 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் அவசர மருத்துவக் குழுவினர் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.இந்த தாக்குதலுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றும், அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதிகரிக்கும் சம்பவங்கள்
உலகிலேயே அதிக கொலை விகிதம் கொண்ட நாடுகளில் ஒன்றான தென் ஆப்பிரிக்காவில், தினசரி சராசரியாக 60 பேர் கொலை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக அங்கீகாரம் இல்லாத குடியிருப்புப் பகுதிகளில் நடைபெறும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் பெரும்பாலும் கும்பல் மோதல்கள் மற்றும் தனிப்பட்ட விரோதங்களுடன் தொடர்புடையதாக இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள ஒரு மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 9 பேர் உயிரிழந்த சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.