;
Athirady Tamil News

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்: 26 பேர் பலி

0

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்யும் தலிபான்களின் கிளை அமைப்பான தெஹ்ரிக் இ தலிபான் அமைப்பு பாகிஸ்தானில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாக பாகிஸ்தான் அரசு குற்றஞ்சாட்டி வருகிறது. இந்த அமைப்புக்கு ஆப்கானிஸ்தான் ஆதரவு அளிப்பதாக கூறி அந்நாட்டின் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்துகிறது. இதற்கு பதிலடியாக ஆப்கானிஸ்தானும் அவ்வப்போது பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான மோதலால் எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்நிலையில், நேற்று இரவு ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தி உள்ளது. இரவு முழுவதும் நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் அப்பாவி பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் அரசாங்கம் குற்றம்சாட்டியது.

“பாகிஸ்தான் ராணுவம் நேற்று இரவு மீண்டும் ஆப்கானிஸ்தானின் வான்வெளிக்குள் அத்துமீறி, குனார், கோஸ்ட் மற்றும் பாக்டிகா மாகாணங்களில் உள்ள பொதுமக்களின் வீடுகள் மீது குண்டுவீசித் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல்களில் 11 குழந்தைகள், ஒரு பெண் மற்றும் ஒரு முதியவர் கொல்லப்பட்டனர். மேலும் 14 பெண்கள் மற்றும் குழந்தைகள் காயமடைந்தனர்” என அரசு செய்தித் தொடர்பாளர் கூறியிருந்தார்.

ஆனால், ஆப்கானிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் மறைவிடங்களை குறிவைத்து, நேற்று இரவு நேரத்தில் துல்லிய தாக்குதல்களை நடத்தியதாகவும், அதில் 26 பேர் கொல்லப்பட்டதாகவும் பாகிஸ்தான் தகவல் தொடர்புத்துறை மந்திரி அத்தாவுல்லா தரார் தெரிவித்தார்.

பயங்கரவாதிகளின் புகலிடங்கள்
பாகிஸ்தானில் சமீபத்தில் நிகழ்ந்த பயங்கரவாதச் சம்பவங்களைத் தொடர்ந்து, ‘ஃபித்னா அல்-கவாரிஜ்’ அமைப்பைச் சேர்ந்தவர்கள் மற்றும் தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டுபவர்களின் மறைவிடங்கள் மற்றும் பாதுகாப்பான புகலிடங்கள் மீது பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை தணித்து அமைதியை ஏற்படுத்த சீனா முயற்சி செய்து வரும் நிலையில், இந்த தாக்குதல் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.