காங்கேசன்துறை முதல் கற்பிட்டி வரை; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை முதல் கற்பிட்டி வரையான கடற்பரப்புகளில் மறு அறிவித்தல் வரும் வரை பயணிப்பதைத் தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்கரைக்கு அப்பாலுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60-70 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதால், இக்கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்பரப்புகளுக்குள் செல்ல வேண்டாம்
எனவே, மறு அறிவித்தல் வரும் வரை இக்கடற்பரப்புகளுக்குள் செல்ல வேண்டாம் என கடற்படையினருக்கும் கடற்றொழிலாளர் சமூகத்திற்கும் அறிவுறுத்திப்பட்டுள்ளது.
அதேபோல், திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக காங்கேசன்துறை வரையிலும், கற்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலுமான கடற்கரைக்கு அப்பாலுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-60 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதால், இக்கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படலாம் என்றும் அந்த திணைக்களம் எச்சரித்துள்ளது.
மேலும், மன்னாரிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்கரைக்கு அப்பாலுள்ள கடற்பரப்புகளில் கடல் அலைகளின் உயரமானது சுமார் 2.0 – 2.5 மீற்றர் வரை உயரக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிடப்பட்டுள்ளது.