;
Athirady Tamil News

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு ; நாகமுத்து பிரதீபராஜா விடுத்துள்ள எச்சரிக்கை

0

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 22ஆம் திகதி வரை கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது சென்னைக்கு கிழக்காகக் காணப்படும் வளிமண்டலச் சுழற்சி, மீண்டும் தெற்கு நோக்கி நகர்ந்து பாக்கு நீரிணை ஊடாக அரபிக்கடலை நோக்கிச் செல்லும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

குறித்த வளிமண்டலச் சுழற்சி அரபிக்கடலை நோக்கி நகரும்போது, வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னார் உள்ளிட்ட நிலப்பரப்புகளைக் கடந்து செல்லும் வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக எதிர்வரும் 22ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

குறிப்பாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அனைத்து மாவட்டங்களிலும் கணிசமான அளவு மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காலப்பகுதியில் மழையுடன் செறிவான இடிமின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதேவேளை, குறித்த வளிமண்டலச் சுழற்சியின் தாக்கத்தால் இன்று முதல் எதிர்வரும் 23ஆம் திகதி வரை வடமத்திய, வடமேல், மத்திய மற்றும் மேல் மாகாணங்களின் பல பகுதிகளிலும் பரவலாகக் கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வளிமண்டலச் சுழற்சி பாக்கு நீரிணை ஊடாக நகரும் வாய்ப்புள்ளதால், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களை அண்மித்த கடற்பகுதிகள் கொந்தளிப்பாகக் காணப்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனால் எதிர்வரும் இரு தினங்களிலும் குறித்த கடற்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்வதைத் தவிர்ப்பது சிறந்தது என பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், இந்த இரு தினங்களிலும் தீவுகளுக்கிடையில் கடற்பயணங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளவர்களும் வளிமண்டலச் சுழற்சியின் நகர்வு மற்றும் கடல் நிலைமைகளைக் கருத்திற்கொண்டு அவதானத்துடன் செயற்படுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.