;
Athirady Tamil News

மொடக்குறிச்சி அருகே தெருநாய்கள் கடித்து குதறியதில் 600 கோழிக் குஞ்சுகள் இறந்தன

0

ஈரோடு,

மொடக்குறிச்சி அருகே நள்ளிரவில் கோழிப்பண்ணைக்குள் புகுந்த தெருநாய்கள் கடித்ததில் ஏராளமான கோழிக்குஞ்சுகள் இறந்தன.

நாட்டுக்கோழிப்பண்ணை
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த ஈஞ்சம்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட கொமரம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 64). விவசாயியான இவர், தனது வீட்டின் முன்பாக 3 பெரிய ஷெட்டுகள் அமைத்து நாட்டுக்கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இந்த பண்ணையில் வளர்ப்பிற்காகப் பொறிக்கப்பட்டு 2 மாதங்களே ஆன 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுக்கோழிக்குஞ்சுகள் அடைக்கப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வந்தன.

நள்ளிரவில் நடந்த பயங்கரம்
வழக்கம் போல் பண்ணை பணிகளை முடித்துவிட்டு கணேசன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் கோழிப்பண்ணையில் இருந்து கோழிக்குஞ்சுகள் பயங்கரமாக அலறும் சத்தம் கேட்டுள்ளது. சத்தம் கேட்டுத் திடுக்கிட்டு எழுந்த கணேசன், பதறியடித்துக் கொண்டு ஓடிவந்து பண்ணைக்குள் சென்று பார்த்தார்.

அப்போது, அப்பகுதியில் சுற்றித் திரியும் 4 தெருநாய்கள் பண்ணையின் பாதுகாப்பு வேலியைத் தாண்டி உள்ளே புகுந்து, கோழிக்குஞ்சுகளைக் கடித்துக் குதறி அட்டகாசத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தெருநாய்களை அடித்து விரட்டினர்
நாய்களைக் கண்ட கணேசன், உடனடியாக பண்ணைக்குள் சென்று அந்த தெருநாய்களைத் துரத்த முயன்றார். ஆனால், வெறிகொண்ட நிலையில் இருந்த நாய்களை அவரால் தனியாகத் துரத்த முடியவில்லை. இதையடுத்து, அவர் உடனடியாக அக்கம்பக்கத்தினருக்குத் தகவல் கொடுத்து உதவிக்கு அழைத்தார்.சத்தம் கேட்டு அங்கு விரைந்து வந்த மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, தடி மற்றும் கம்புகளுடன் பண்ணைக்குள் புகுந்து, அட்டகாசம் செய்த தெருநாய்களை அடித்து விரட்டினர்.

மக்கள் கோரிக்கை
இருப்பினும், நாய்கள் கடித்ததில் ஏராளமான கோழிக்குஞ்சுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன.இச்சம்பவம் விவசாயி கணேசனுக்குப் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கொமரம்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், உள்ளாட்சி நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டுத் தெருநாய்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.